Tuesday, June 20

அன்புத் தோழி...


சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..

இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!

இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி !

சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!!

எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!

எத்தனை எத்தனை உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!

வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்
சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்
உன்னிடம் மட்டுமே !

சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி !

நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...

உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் !!!

என்று தொலைந்தோம்..???பாரபட்சமின்றி பண்போடு
புன்னகை சிந்தும் உதடுகள்....
கண்ணில் காணும் காட்சிகள்
யாவும் ரசித்த மனம்...

அறிந்தவர் எல்லாம் அன்பான
நண்பராய் ஏற்ற மனம்....
நிலா முதல் காக்கை வரை
நெஞ்சில் நிறைத்த மனம்....

மலர்,மரம்,ஆகாயம் எனப் பரந்த
பார்வை கொண்ட மனம்...
நாளை பற்றிய பயமும்
நேற்றைய கவலையும்
மறந்த மனம்...

இன்றைய இன்பத்தை
முழுதும் உள்வாங்கி
அனுபவிக்கும் மனம்...

என்று தொலைத்தோம் இவைகளை ..???

குழந்தையும் தெய்வமும் ஒன்றாம்..!!!!!!!!!

என்று தொலைத்தோம் நாம்
தெய்வத் தன்மையை......????

கூட்டிக் கழிக்கும் குணம்
கொத்திச் சென்றதோ???

ஆன்மாவையே மறைத்த மதியீனங்கள்
அழித்து விட்டனவோ???

காண்பதில் எல்லாம் பணப்பார்வை படிய
பரந்த பார்வை மங்கிப் போயிற்றோ???

மனம் சுருங்கி அங்கே
வறுமை குடிகொண்டதால்
தெய்வம் வெளியேறியதோ???

என்று தொலைத்தோம்
தெய்வத் தன்மையை......????

என்று தொலைந்தோம் நாம்???

Monday, June 19

இறுதிப் புள்ளி


துளிர்க்கும் கண்ணீரை
உள்ளிழுக்கும் வித்தை கற்றேன்..


நிராதரவாய் நிற்கும் நிதர்சனம்
மரண தண்டனை இது எனக்கு !


கருத்தாய் கவியெழுதும் விரல்களா
கலையிழந்தன இன்று ?


உச்சரிப்பை உபதேசித்த உதடுகளா
ஊமையானது இன்று ?


இசையோடு இசைந்தாடும் நீயா
நரம்பற்ற வீணையாய் இன்று ?


சிறப்பாய் சிந்திக்கும் மூளையா
செயலிழந்தது இன்று ?


இறுதிப் புள்ளியைக் கண்டுவிட்ட
இயலாமை உன் கண்களில் !


சாத்தியமேயில்லையா?
கேள்விக்கு பதில் என்னவோ
சுடும் நிஜம் மட்டுமே....


உடல்மீது மட்டும் பற்றிருந்தால்
காண்பதே போதும் என்றிருப்பேன்..


உணர்வற்ற உடலில் ஊசலாடும்
உன் உயிர் மீதும் கொண்ட காதலால்தான்.......


உடல் ரணமானால் மருந்துகள் உதவலாம்..
உயிர் ரணமானால் மரணமே நிவாரணம்..


கருணைக் கொலை அல்ல இது ...
கருணையின் அடிப்படையில் விடுதலை....
கண்ணீர் விட்டு களங்கப் படுத்தாதீர் !

முகமூடிகள்சிரித்து சிரித்து

முதுகில் குத்துவர்....
பேச்சின் நடுவே
குழி பறிப்பர்..
அழுது புலம்பி விழ வைப்பர்...
'வாழ்தல் சாத்தியமா
இவர்கள் நடுவே !' என
பயம் கொடுப்பர்....
எங்கே ஓடுவது இவர்களை வெறுத்து...?
முதலைக் கண்ணீர் ;
ஓணாய் கரிசனம் ;
நரியின் தந்திரம்;
புலியின் கொடூரம் ;
இன்னும்..இன்னும்..
மனிதன் எனும்
முகமூடிகளுடன்
உலக உருண்டையின்
எல்லா மூலைகளிலும் பலர்...
எங்கே ஓடுவது இவர்களை வெறுத்து...?

வேறு வழியில்லை
அன்பெனும் கேடயம் எடுத்து
புன்னகை அம்புகள் தொடுத்து
போரற்ற களத்தில் சந்தித்து
வீரமாய் ..விவேகமாய்...
இவர்களை திருத்து..
இல்லையேல் விலக்கு...!

வாழும் காதல்எப்படி முடிந்தது ?
என்று முறிந்தது ?

நமக்குள் பிளவும்
தொடர்புக்கு முற்றுப் புள்ளியும்
உண்டானது நிஜமா ?

மனசுக்குள் நினைவுகளும்
நினைவுகளின் அலைகளும்
என்றாவது அடங்குமா?

கண்களால் பரிமாறிக் கொண்டதும்
விரல்களால் உணர்ந்ததும்
உதடுகளால் எதிரொலித்ததும்
அழிந்தா போய்விடும் ?

அமர்ந்த நடந்த இடங்களும்
அனுப்பி வைத்த பரிசுகளும்
இன்றும் மணக்கும் புகைப்படமும்
கல்வெட்டுக்கள் அல்லவா ?

நேற்று மனனம் செய்தது மறந்தாலும்
நீ காற்றுவாக்கில் பேசியது கூட
இன்னும் மனதில் அழியாமல்
கனன்று கொண்டிருப்பதை அறிவாயா ?

நீயும் நானும்
தூரங்களால் விலகியிருக்கலாம்...
துயரங்களால் திசைமாறியிருக்கலாம்..
சந்தர்ப்பதால் பிரிந்திருக்கலாம்..

ஆனால்...

காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...

எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...

ஆம்..

காதலர்கள் தோற்கலாம்....
காதல் தோற்ப்பதில்லை....