Saturday, November 20

பிறந்த நாள் வாழ்த்துக்கள்வலையுலக நண்பர்களே !! அனைவருக்கும் வணக்கம்...நீண்ட இடைவேளைக்கு காரணம், 2 மாத விடுமுறைக்கு இந்தியா வந்துள்ளேன்..இன்று என் செல்ல மகள் ஷ்ரேயா பிறந்த நாள்.இரண்டாம் வகுப்பில் படிக்கிறாள்.அவர்கள் பள்ளியில் மாணவர்களின் கவிதை மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிடுவார்கள்..அதற்காக அவள் எழுதிய கவிதை(தெரியாத வார்த்தைகள் மட்டும் சொல்லிக் கொடுத்தேன்). அவள் பிறந்த நாளான இன்று அதை உங்களிடம் சேர்ப்பதில் மகிழ்ச்சி.


                         என் பிறந்த நாள்


வருடத்திற்கு ஒரு நாள்
எனக்குப் பிடித்த நன்னாள்

புத்தாடை உடுத்தி பெற்றோர் ஆசி வாங்குவேன்
கோவிலுக்குச் சென்று கடவுளை வணங்குவேன்

நண்பர்களோடு சேர்ந்து 
நல்லதொரு விருந்து
களைக்கும் வரை ஆட்டம்
ஆஹா என்ன கொண்டாட்டம்

பரிசுகளோ ஏராளம்
நண்பர்கள் தந்த பொம்மைகள்
தாத்தா தந்த புத்தகம்
பாட்டி தந்த பேனா
மாமா தந்த மிதிவண்டி
அம்மா அப்பா தந்த கைக்கடிகாரம்

என் மனம் கவர்ந்த பரிசு எது?
அல்வா போன்ற பரிசு அது !
அன்பால் தந்த பரிசு அது !
என் அன்புத் தங்கை தந்த முத்தம்  அது !!!
விலைமதிப்பற்ற பரிசு அது 
இதுபோல் வேறு கிடைத்திடுமா????
Thursday, October 14

சிலநேரங்களில்...


எங்கே தேடுவேன் மன அமைதியை ??
அலைக்கழிப்பில் என் உயிர்...
யாருக்காக..எதற்காக...ஏன்...
புலப்படாத நேரங்களில்
புதுவிடையாய் உன் தரிசனம்...
விடையா? இல்லை நீ புதிரா??
ஏனிந்த எண்ணமாற்றம் என்னுள்...

வாழ்க்கைப் பாதையில் வசந்தம் கூட
சிலநேரங்களில் 
சூறாவளியாய் சிலருக்கு !
எண்ணக் கோர்வையின் கவிதைகூட
சிலநேரங்களில்
கிறுக்கலாய் சிலருக்கு !
செவி வழி உயிர் வருடும் இசைகூட
சிலநேரங்களில்
இரைச்சலாய் சிலருக்கு !
பார்க்கும் பார்வையின் அர்த்தம் கூட
சிலநேரங்களில்
தீர்க்கதரிசனமாய் சிலருக்கு !
தீட்சண்யமாய் சிலருக்கு !
தரித்திரியமாய் சிலருக்கு !!!

உன் விழியின் வீரிய வீச்சும்
புதிர் போடும் புன்னகையும்
என்னை இளைப்பாற்றும் நிழலா??
இல்லை இருட்டடிக்கும் இருளா????

Wednesday, October 6

வேராக நீ இருக்க....

சீறும் விழிகளும்
உயர்த்தும் புருவங்களும்
சுளிக்கும் உதடுகளும்
மட்டுமே போதுமானதாக இருக்க
எனைக் காயப்படுத்த
நீ ஏந்தியிருக்கும் புதிய
ஆயுதமாக வார்த்தை அம்புகள்...
மழை நின்ற பிறகும்
நடுங்கும் மலர்போல
என் மனம்...!
வார்த்தைகள் வதைக்கவில்லை
அதைப் பிரசவிப்பது 
உன் உதடுகள் என்பதுவே வலி ..
அதீத அன்பின் வெளிப்பாடா 
ஆழ்மனதின் வெறுப்பா
சொல்லுருவம் பெற்றது 
என்னவென்று புரியாமல் நான்...
எதுவாக இருந்தாலும்
வெளியே தெரியாத 
வேர்தான் நீ எனக்கு
வெட்டிவிட நினைக்காதே
வீழ்ந்துவிடுவேன் நிரந்தரமாய் !!!

-

Thursday, September 23

கண்டிராத கோலங்களில்அடி வாங்கி அழுது கொண்டிருக்கும் பாரதி
ஓடி ஒளிந்து விளையாடும் ஒளவை
தூக்கக் கலக்கத்தில் கொட்டாவியுடன் கிருஷ்ணன்
காற்சிலம்பைக் காணாமல் தேம்பும் கண்ணகி
எழுத்தாணியால் முதுகு சொறியும் வள்ளுவன்
கைத்தடியால் அடுத்தவனை அடிக்கும் காந்தி
ரோஜா இதழைக் கசக்கி எறியும் நேரு 

அழைத்தவுடன் மேடையேற 
வரிசையில் காத்தபடி
கண்டிராத கோலங்களில்
இவர்கள்..................

பெற்றவர் பெருமைக்காக
யாரென்ற அறிமுகம்கூட
அல்லாதவரின் முகம் அணிந்து
மனனம் செய்தது
மறக்காமாலிக்க வேண்டி
உருப் போட்டபடி
’மாறுவேடப்போட்டி’யில்
பரிசுக் கனவுகளுடன்
காத்திருக்கும் பிஞ்சுகள் !!!

Friday, September 17

மனதில் ஒரு துளி’படத்திற்கு கவிதை ’ என்ற போட்டியில் கொடுத்த படத்திற்கு நான் எழுதிய கவிதை..போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது...இதோ அந்தக் கவிதை...............


Tuesday, September 14

தளிர்நடையில் வா
பேருந்து நிலையத்தின்
பேரிரைச்சலுக்கு நடுவே
இன்னிசையாய் செவி வருடுகிறது

அலுவலக சந்திப்புகளின் 
முக்கிய உரையாடலின் போதும்
முட்டி மோதி வெளிவரத் துடிக்கிறது

சாலையில் பச்சை விளக்கெறியக்
காத்திருக்கும் ஒரு சில நிமிடங்களில் 
தென்றலாய் எனைத் தழுவுகிறது

என்னவருடனான செல்ல ஊடல்களின் 
வார்த்தையாடலின் போதுகூட
முண்டியடித்துக் கொண்டு 
முன்னால் நிற்கிறது...

தளிர்நடை போட்டு வரவேண்டிய 
தனிமையில் மட்டும்
’இது உனக்கான நேரம்...
 வா, உன்னை வார்த்தைகளில் வரித்து
அணைத்துக் கொள்கிறேன்’ என 
ஆசையாய் அழைத்த போதும்
ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறது 
என் கவிதைக் குழந்தை.....

Monday, September 6

காதல் நுழைந்த கணம்....

திசுக்கள் திடுக்கிட...
தசைகள் தடுமாற...
கண்கள் காதல் கசிய....
கைவிரல்கள் கவியெழுத...
கால்கள் தாளமிட...
உதடுகள் இசை மீட்ட.....
உன்னிரு விழி ஒரு நிமிட
பார்வையில்...
இத்தனை மாற்றங்கள்
கோர்வையாய்... 
மனம் மட்டும் 
எதற்கும் அசையாமல்....
துறவி போல்
ஒன்றிலே லயித்து விட்டது...
துறவிக்கு கடவுள்..
எனக்கு நீ !!!!!Wednesday, September 1

நேச நெருப்புஒரு கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை இது..கவிதையின் கரு எதுவாக இருந்தாலும்,பஞ்சபூதங்களும் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதே போட்டியின் விதிமுறை...வங்கிக் கணக்கு நிரம்பி வழிய 
பண வேட்டையில் நீங்கள்
பாச வேட்கையில் நான்


ஐந்து வயதில் ஐபாட்
எட்டு வயதில் கைபேசி
இன்று பத்தாவது பிறந்த நாள்
பரிசாக மடிகணினி
மனதில் மட்டும் அணைக்க ஆளின்றி
கனன்று கொண்டிருக்கும் நேச நெருப்பு !


பாசம் கூட பணத்திற்கு ஏற்றாற்போல்
காட்டும் வேலையாட்களுக்கு
மத்தியில் என் நாட்கள்....
அடுத்த தெரு பள்ளிக்குகூட
அமர்த்தலாய் வாகனத்தில் போய்
இறங்கும் பகட்டு..
கையசைத்து விடை பெறுவதென்னவோ
காற்றுக்குத் தான் தினமும்..
சனி ஞாயிறு பகிர்வுக்கென
ஒத்திப்போட்டு மறந்தே போன
சந்தோஷ தருணங்கள்
எத்தனை எத்தனையோ...
வானுலவும் மேகக்கூட்டத்திற்கு
உருவம் கற்பனை செய்து
உயிர்ப்பித்து உணர்வுகள்
கொட்டுகிறேன் அவற்றிடம்...


உன் கவன ஈர்ப்பு வேண்டி
மழைநீரில் என் தவம்
அது தந்த வரமாகக் காய்ச்சல்
ஒருநாள் விடுமுறையுடன்
என் அருகிலேயே நீ...
சுரமும் வலியும் சுகமாகி
அதுவே நீடிக்காதா என்ற
ஏக்கத்தைத் தந்தது அந்நாள்..

ஐந்து வயதில் சொன்னபோது
அறியாப்பிள்ளை என்றாய்
இன்றும் சொல்கிறேன்....

பணமோ பகட்டோ வேண்டாம் அம்மா
பகுதி நேரப்பாசமின்றி முழுதும் வேண்டும் எனக்கு!!
நிலமோ நகையோ வேண்டாம் அம்மா
நிலாச் சோறு போதும் உன் கையால் எனக்கு !!!!!!

Monday, August 16

கனிவாயா??அன்று.......
மகிழ்ச்சி வெள்ளத்தில் என் மனம்.....
உன் விழி தரிசனம்.....

இன்று....
உன் வார்த்தைக் கங்குகள்
வலிக்க வைக்க
இது தீயின் தருணம்......

அன்று....
கனவை எனக்கு நீ கொடுத்தாய்...
கற்பனைக்கு உயிர் கொடுத்தாய்.....

இன்று....
கனிவாய் என காத்திருக்கிறேன்
அதே காதலோடு.....

என் வாழ்க்கை உன் கையில்....
உன் ஒற்றை சொல்லில் தெரியும்
அது வரமா சாபமா என்று !!!!

Thursday, August 12

தழுவும் தனிமைதனிமையை நேசிக்கிறேன்
அமைதி விரும்பியல்ல..

வெற்றிடத்தை நிரப்பும் 
வேகத்தோடு வரும் காற்றாய்...
அணை உடைந்து பெருக்கெடுத்து
சீறிப்பாயும் நதி வெள்ளமாய்...
முட்டையோட்டிற்குள் இருந்து
முட்டி மோதி வெளிவந்த சிறுபறவையாய்...
           


தனிமைக்கென்றே காத்திருந்தது 
நட்ட மறுகணமே விதை மரமாகி
அழகிய பூக்களைச் செறிந்தாற்போல
என் தனிமையைத் தழுவி 
முழுதுமாக ஆக்கிரமிக்கும் 
உன் நினைவுகளை ஒருங்கிணைப்பதால்..

Monday, August 2

என்னுள்ளே....

எனது இந்த கவிதை வார்ப்பு இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


http://www.vaarppu.com/view/2243/


ஏதோ ஒரு இறுக்கம்...
கதறி அழத் தோன்றும் துக்கம்
யாருமே இல்லை போன்றதொரு ஏக்கம்......
இசையில் கரைக்க முயல்கிறேன்
வென்றது என்னை
புத்தகத்தில் மறக்க நினைக்கிறேன்
புதைத்தது என்னை
தூக்கத்தில் கூட விடுவதில்லை
கனவாக மிரட்டல்
அடிக்கடி அடிவயிற்றை
அழுத்தும் சோகம்
என்ன செய்தாலும் எதுவோ 
என்னை தொல்லை செய்கிறது
எங்கு சென்றாலும் நிழல்சுமையாய்
தலையில் இறங்கும் பாரம்
அழ வைப்பதா உன் நோக்கம் ??
இதில் மட்டும் தோற்று விடுவாய்...
கண்ணீர் சுரப்பிகள் 
வேலைப் பளு மிகுதியால்
பழுதாகி கட்டாய ஒய்வெடுத்துச் 
சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது
இன்றோடு ஒரு முடிவு செய்தே தீருவது 
என்ற தீர்மானத்துடன்
என்னுள் வலை வீசுகிறேன்..
எத்தனையோ குப்பைகளுக்கு மத்தியில்
அழிந்தே விட்டது என்று நான்
 நம்பத் துணிந்த  என் ”சுயம்”
எங்கோ ஒட்டிக் கொண்ட மிச்சத்தின் துகளாய்
ஏக்கப் பார்வை பார்க்கிறது என்னை.....

Tuesday, May 18

மங்கையர் மலரில் என் கவிதைஎன்னுடைய “அந்த தருணம் “ கவிதை மே மாத மங்கையர் மலரில் வெளியாகியிருக்கிறது...அது அன்னையர் தின சிறப்பிதழ் ....தலைப்பை மட்டும் மாற்றியிருக்கிறார்கள்....


Thursday, April 22

மெளனமே காதலாய்


உன் நினைவுச் சுமைகளின்
அண்மை தரும் அணைப்பை
தள்ள முடியாது தவிக்கிறேன்...

பூட்டி வைக்கும் உன் நினைவுகளை
தனிமையில் மட்டும் மெல்ல
திறந்து ரசிக்கிறேன்....

உன்னுள் சுழன்ற அதே
சலன உணர்வுகள் தான் எனக்கும்....

பெயர் சூட்டத் தெரிந்தும்
இயலாமல் துடிக்கிறேன்.....

குழப்பமும் தயக்கமும் சூழ
மெளனம் அணிகிறேன்.....

மெளனமே காதலாய் !!!