Thursday, September 23

கண்டிராத கோலங்களில்அடி வாங்கி அழுது கொண்டிருக்கும் பாரதி
ஓடி ஒளிந்து விளையாடும் ஒளவை
தூக்கக் கலக்கத்தில் கொட்டாவியுடன் கிருஷ்ணன்
காற்சிலம்பைக் காணாமல் தேம்பும் கண்ணகி
எழுத்தாணியால் முதுகு சொறியும் வள்ளுவன்
கைத்தடியால் அடுத்தவனை அடிக்கும் காந்தி
ரோஜா இதழைக் கசக்கி எறியும் நேரு 

அழைத்தவுடன் மேடையேற 
வரிசையில் காத்தபடி
கண்டிராத கோலங்களில்
இவர்கள்..................

பெற்றவர் பெருமைக்காக
யாரென்ற அறிமுகம்கூட
அல்லாதவரின் முகம் அணிந்து
மனனம் செய்தது
மறக்காமாலிக்க வேண்டி
உருப் போட்டபடி
’மாறுவேடப்போட்டி’யில்
பரிசுக் கனவுகளுடன்
காத்திருக்கும் பிஞ்சுகள் !!!

Friday, September 17

மனதில் ஒரு துளி’படத்திற்கு கவிதை ’ என்ற போட்டியில் கொடுத்த படத்திற்கு நான் எழுதிய கவிதை..போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது...இதோ அந்தக் கவிதை...............


Tuesday, September 14

தளிர்நடையில் வா
பேருந்து நிலையத்தின்
பேரிரைச்சலுக்கு நடுவே
இன்னிசையாய் செவி வருடுகிறது

அலுவலக சந்திப்புகளின் 
முக்கிய உரையாடலின் போதும்
முட்டி மோதி வெளிவரத் துடிக்கிறது

சாலையில் பச்சை விளக்கெறியக்
காத்திருக்கும் ஒரு சில நிமிடங்களில் 
தென்றலாய் எனைத் தழுவுகிறது

என்னவருடனான செல்ல ஊடல்களின் 
வார்த்தையாடலின் போதுகூட
முண்டியடித்துக் கொண்டு 
முன்னால் நிற்கிறது...

தளிர்நடை போட்டு வரவேண்டிய 
தனிமையில் மட்டும்
’இது உனக்கான நேரம்...
 வா, உன்னை வார்த்தைகளில் வரித்து
அணைத்துக் கொள்கிறேன்’ என 
ஆசையாய் அழைத்த போதும்
ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறது 
என் கவிதைக் குழந்தை.....

Monday, September 6

காதல் நுழைந்த கணம்....

திசுக்கள் திடுக்கிட...
தசைகள் தடுமாற...
கண்கள் காதல் கசிய....
கைவிரல்கள் கவியெழுத...
கால்கள் தாளமிட...
உதடுகள் இசை மீட்ட.....
உன்னிரு விழி ஒரு நிமிட
பார்வையில்...
இத்தனை மாற்றங்கள்
கோர்வையாய்... 
மனம் மட்டும் 
எதற்கும் அசையாமல்....
துறவி போல்
ஒன்றிலே லயித்து விட்டது...
துறவிக்கு கடவுள்..
எனக்கு நீ !!!!!Wednesday, September 1

நேச நெருப்புஒரு கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை இது..கவிதையின் கரு எதுவாக இருந்தாலும்,பஞ்சபூதங்களும் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதே போட்டியின் விதிமுறை...வங்கிக் கணக்கு நிரம்பி வழிய 
பண வேட்டையில் நீங்கள்
பாச வேட்கையில் நான்


ஐந்து வயதில் ஐபாட்
எட்டு வயதில் கைபேசி
இன்று பத்தாவது பிறந்த நாள்
பரிசாக மடிகணினி
மனதில் மட்டும் அணைக்க ஆளின்றி
கனன்று கொண்டிருக்கும் நேச நெருப்பு !


பாசம் கூட பணத்திற்கு ஏற்றாற்போல்
காட்டும் வேலையாட்களுக்கு
மத்தியில் என் நாட்கள்....
அடுத்த தெரு பள்ளிக்குகூட
அமர்த்தலாய் வாகனத்தில் போய்
இறங்கும் பகட்டு..
கையசைத்து விடை பெறுவதென்னவோ
காற்றுக்குத் தான் தினமும்..
சனி ஞாயிறு பகிர்வுக்கென
ஒத்திப்போட்டு மறந்தே போன
சந்தோஷ தருணங்கள்
எத்தனை எத்தனையோ...
வானுலவும் மேகக்கூட்டத்திற்கு
உருவம் கற்பனை செய்து
உயிர்ப்பித்து உணர்வுகள்
கொட்டுகிறேன் அவற்றிடம்...


உன் கவன ஈர்ப்பு வேண்டி
மழைநீரில் என் தவம்
அது தந்த வரமாகக் காய்ச்சல்
ஒருநாள் விடுமுறையுடன்
என் அருகிலேயே நீ...
சுரமும் வலியும் சுகமாகி
அதுவே நீடிக்காதா என்ற
ஏக்கத்தைத் தந்தது அந்நாள்..

ஐந்து வயதில் சொன்னபோது
அறியாப்பிள்ளை என்றாய்
இன்றும் சொல்கிறேன்....

பணமோ பகட்டோ வேண்டாம் அம்மா
பகுதி நேரப்பாசமின்றி முழுதும் வேண்டும் எனக்கு!!
நிலமோ நகையோ வேண்டாம் அம்மா
நிலாச் சோறு போதும் உன் கையால் எனக்கு !!!!!!