Thursday, June 2

பந்தயக் குதிரை

 சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய, 'முத்தமிழ் விழா 2011' கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கவிதை இது


    

அதிகாலை கடிகார அலறலோடு
ஆரம்பிக்கின்றன நாட்கள்..
பள்ளி நேரமும்  சிறப்பு வகுப்புகளுமாக
பலமணிநேரங்கள் பள்ளிக்கூடத்தில்.....


 தவிரவும்  துணைப்பாட வகுப்புகள்
அம்மாவின் கனவுக்காக பாட்டு,நடன வகுப்புகள்
அப்பாவின் ஆசைக்காக கராத்தே,நீச்சல் வகுப்புகள்
வீட்டில் கூட அட்டவணைப்படி  பயிற்சிகள்
அனைத்திலும் முதன்மையாக இருக்க
வேண்டியது மட்டுமே குறிக்கோளாக.....


சமூக மன்றங்களும் சில அமைப்புகளும்
குழந்தைகளின் குதூகலத்திற்கும்
நல்ல அனுபவம் பெறவும் நடத்தும்
போட்டிகள் அனைத்திலும் சேர்க்கப்பட்டு
வென்றாக வேண்டிய கட்டாயத்தில்......


இலக்கு எதுவென்ற அறிதல் கூட இல்லாமல்
பெற்றோரின் இலட்சியங்களையும் கனவுகளையும்
தன் முதுகில் சுமந்து ஓடும் பந்தயக் குதிரையாக...
இளைப்பாறல் கூட அடுத்த ஓட்டத்திற்கான
பயிற்சியாக ஆகிவிட்ட பரிதாபம் !!


ஓய்வு பெற்று வீட்டிலிருக்கும் தாத்தாவைப் பார்த்து
‘நான் எப்போது ஓய்வு பெறுவேன்?’
என் ஏக்கதுடன் கேட்கிறான்..
வாழ்வின் தொடக்கநிலையில் இருக்கும்
’சிறுவன்’ எனும் தன் அழிந்துபோன
அடையாளத்தை மீட்கத் துடிக்கும்
’மாணவன்’ என்றே எப்போதும்
அடையாளம் காணப்படும் சிறியவன்...

Sunday, May 8

தாய்மை
எந்த உறவுக்குமில்லாத
மதிப்பை அன்னைக்கு அளித்து
அதன் பெருமைகள் முடிவில்லா 
பட்டியலாக நீண்டு கொண்டே போய்
மனதில் அசைக்க முடியாத இடத்தைப் 
பெற்றிருக்கிறது இந்த தாய்மை 

பெண் முழுமையடைவது
தாயாகும்போது தான் என்பார்கள்
இயற்கையின் இயல்பான
நிகழ்வான தாய்மையடைவதே
பெருமை என்ற போது 
தாய்மை முழுமையடைவது எப்போது?????


நான் பெற்றவள் என்ற
உரிமை நிலைநாட்டலாய் இல்லாமல்
சுயநலக் கலப்பின்றி 
கருத்து பரிமாறும் சகோதரியாக 
கைகோர்க்கும் போது....

என் அடையாளம் நீ என்ற
அலட்டல் இல்லாமல்
வாழ்வியல் நெறிகளை
வலிக்காமல் திணிக்கத்
தெரிந்த குருவாக 
வழிநடத்தும் போது....

அன்பென்ற பெயரில் நிகழும்
ஆக்கிரமிப்பாக இல்லாமல்
ஆத்மார்த்தமான நட்பாக பிள்ளைகள் மனதில்
அன்னையின் பிம்பம் மலரும்போது மட்டுமே 
முழுமையடைகிறது தாய்மை !!!------நன்றி சிங்கப்பூர் தமிழ்முரசு !!


                        அன்னையர் தின வாழ்த்துக்கள்  !!!
                    

Tuesday, March 8

வெப்ப வலையில் பூமி

 சிங்கப்பூர் "கலைப்பித்தர்கள் கழகம்"  2010-ம் வருடத்திற்கான ஆண்டுமலருக்காக ஒரு கவிதை கேட்டிருந்தார்கள்..அதற்கு நான் எழுதிய கவிதை இது...உலகம் வெப்பமயமாதல் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வேண்டும்...இதைப் படிக்கும் அனைத்து வலையுலக நண்பர்களும் வெப்பமயமாதல் பற்றி ஒரு பதிவு போட முயற்சி செய்யுங்கள்...நன்றி !!!


இதோ அந்த கவிதை............


வெப்ப வலையில் பூமி 


முகமறியா முன்னோர்களின் மதியீனம்
அறிவியலைப் பொறுப்பில்லாமல் 
அனுபவிக்கும் நம் அலட்சியம்...

விளைவு...????

காற்றில் கார்பன்நச்சு
கடலில் ரசாயனக்கழிவு
வான்குடையில் பொத்தல்கள்
உச்சமாக ...
நிலமகளின் கருப்பைக் குலைந்து
பசுமைப் பிரசவம் குறுகியது

தொலைந்த புத்தகத்தின்
இருண்ட நினைவாக 
காப்பாற்றக் கூட மிச்சங்கள்
இல்லாமல் போய்விடும் முன்
ஏதேனும் செய்தே ஆக வேண்டிய 
கட்டாயத்தில் நாம்...

அழிந்த மரத்தை கார்பன் கொடுத்து 
உயிப்பிக்கும் முயற்சி அல்ல இது
கடலைக் கழுவி சுத்தம் செய்து
களங்கம் துடைக்கும் முயற்சி அல்ல இது 

நம் சந்ததியர் வசதிக்கு பொருள் ஈட்டும் 
முனைப்பில் சிறு முயற்சியாய்
வாழ நல்ல பூமியை மீட்டுக் கொடுப்போம் 

விருப்பங்கள் தேவைகள் பிரித்து உணர்வோம்
மறு சுழற்சியை மலரச் செய்வோம்
மரம் ஒன்றேனும் நடுவோம் --முடிந்தால் 
மற்றவர் மனதிலும் நடுவோம் !!!!

Monday, February 7

சிங்கப்பூர் தமிழ்முரசுக்கு நன்றி !!

சிங்கப்பூர் தமிழ்முரசு பத்திரிக்கையின் ஞாயிறு மலரில் எனது கவிதை வெளியாகி இருக்கிறது...தமிழ்முரசுக்கு என் நன்றி !!

இதோ கவிதை .......