Monday, October 26

காத்திருப்பு



விடுமுறை வாரங்களின்
சொற்ப மணிநேரங்களைக் 
கையகப்படுத்தும் 
சந்திப்புகளின் தொகுப்பாகத்தான் 
நமது தாம்பத்திய வாழ்க்கை...

வெளிநாட்டுப் பணத்திற்காக
பணயம் வைக்கப்பட்டு
காலாவதியாகும் முன்
மீட்கப்பட துடித்தபடி இளமை...

ஏக்கங்களும் தவிப்புகளும் 
இடைவிடாத அலைகளாய்
முட்டிக்கொள்ளும் கடலாக மனம்...

அலைபேசி அழைப்புகளில்
எல்லாம் உன் குரலாகவே ஒலிக்கிறது..
நம் செல்லச் சீண்டல்கள் சிணுங்கல்கள்
ஊடல் கூடல் அத்தனையும் ரகசியமாக
ரசிக்கத் தொடங்கிவிட்டது இந்த அலைபேசி...

ஒவ்வொரு பிரிவின்போதும்
உடையும் என் இதயத்தை யாரும்
பார்க்க அனுமதிக்காமல் 
எச்சரிக்கையாக இருப்பதில் 
வலிகளை விழுங்கக் கற்றுக்கொள்கிறேன்...

என் பார்வை வட்டம் விட்டு நீ மறைந்த
அந்த நொடி தொடங்கிவிடுகிறது
அடுத்த சந்திப்பிற்கான
என் காத்திருப்பு..