Monday, November 14

எங் கதெ - இமையம்இமையத்தின் படைப்பில் நான் வாசிக்கும் முதல் படைப்பு என்பதால் சில எதிர்பார்ப்புகளுடனேயே வாசிக்கத் தொடங்கினேன். தலைப்பு எங்கதெ என்று இருப்பதால் கண்டிப்பாக பேச்சு வழக்கில் இருக்கும் ஒரு நாவல் என்பது கூடுதல் ஆர்வத்துடன் படிக்கத் தூண்டியது. 
விபத்தில் கணவனை இழந்தவள் கமலா. அரசின் அனுதாபத்தில் கணவனின் அரசாங்க வேலை அவளுக்கு கிடைக்கிறது. தன் இரட்டைப் பெண் குழந்தைகளோடு வேறொரு கிராமத்தின் அரசுப் பள்ளியில் வேலைக்குச் சேர்கிறாள். ஊரிலிருக்கும் ஆண்கள் வயது வித்தியாசம் இன்றி அவளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடும் வேளையில், அதே ஊரில் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இளைஞனுக்கும் அவளுக்கும் உறவு ஏற்படுகிறது. பள்ளி குமாஸ்தாவாக வேலை செய்யும் அவள், தன் மகள் பள்ளி வயதை எட்டும் வரையில் விநாயகத்தையே நம்பி இருக்கிறாள். பின்னர் கடலூரில் சி.இ.ஓ அலுவலகத்திற்கு மாற்றம் வரும் போது அவளது சூழலும் சார்புகளும் இயல்பாகவே மாறுகின்றன. கமலாவை மனைவியாக நினைத்து வாழும் விநாயகத்தின் வாழ்வில் மூன்றாமவன் நுழைகையில் அவனுடைய கோபம், குரோதத்தின் வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பது "எங் கதெ" யின் முடிவு. இறுதியில் அவளைக் கொலை செய்கிற அளவிற்குச் சென்று பின் அதையும் தவிர்த்துவிட்டுச் செல்கிறான். அவர்களின் உறவினால் வரும் அக, புறச் சிக்கல்களையும், உளவியல் பிரச்சனைகளையும் உணர்வுகள் ததும்பும் எழுத்து நடையில் எளிதாகச் சொல்லிவிடுகிறார் எழுத்தாளர்.
நாவல் முழுதும் பேச்சு வழக்கில் இருப்பதால் இயல்பாகவே நம்மால் எளிதில் பொருந்திவிட முடிகிறது. கதையைச் சொல்கிற விநாயகம் சொல்வது போல, இது அவனுடைய கதை மட்டுமல்ல, கமலாவின் கதையும்தான். கதை முழுதும் கமலாவின் பெயர் நிறைந்திருக்க, கதை சொல்லியின் பெயர் நாவலில் ஒரே ஒரு முறைதான் சொல்லப்பட்டிருக்கிறது. காரணம், விநாயகத்தின் புலம்பல்களாக மட்டுமே கதை நீள்கிறது. 

"நல்ல பாம்பு வர்ற மாரி சரசரன்னு வந்தா. ’ என்று கமலாவை அறுமுகப்படுத்துவதில் தொடங்கி,

”கண்ணீருல பொம்பள கண்ணீரு, ஆம்பள கண்ணீருன்னு இருக்கா? வலியில பொம்பள வலி ஆம்பளவலின்னும் 
இருக்கா? ஆனா ஒலகம் அப்படித்தான் சொல்லுது. தனக்கு வந்தா சோகம்.கவல. 
துயரம். அதே மத்தவங்களுக்கு வந்தா வெறும் சும்மா. காத்துப்போல.” என்று கழிவிரக்கத்தில் துவண்டு,
‘நான் இறங்கிய ஆற்றுக்கு மறு கரையில்லை” “கிணத்துல குதிச்சா தப்பிக்கலாம், கடல்ல குதிச்சா தப்பிக்க முடியுமா“ என்று விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளலாமா, கொலை செய்யலாமா  என சிந்திப்பது வரை விநாயகத்தின் வாழ்க்கை மாற்றங்கள் காட்டப்படிருக்கிறது.

ஆண் மனதின் ஆழ்ந்த வடு தன்னிரக்கத்தின் உச்சத்தில் கொலை செய்யும் அளவிற்குப் போகும் விநாயகம் சட்டென்று மனம் மாறிவிடுகிறான். அதுவரை பெண் உடலைப் பற்றி அவன் கொண்டிருந்த அத்தனை பிம்பங்களும் மறைந்து வேறு கோணத்தில் சிந்திக்கத் தொடங்குகிறான். 

தன் குடும்பம், நண்பர்கள், ஊர், உறவு எல்லாம் மறந்து கமலாவின் பின்னால் சுற்றும் விநாயகம் அவளிடம் அவமானப்பட்டுத் திரும்பும் ஒரு நாளில் எப்படி குடும்பத்துடன் அந்நியப்பட்டிருக்கிறோம் என்பதை உணரும் காட்சிகள் மிகவும் இயல்பு. கமலாவை விநாயகத்தின் குடும்பம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக ஏற்றுக்கொள்வது போன்ற காட்சிகளும் உண்டு. அதன் பாதிப்பில் இருந்து அவனை வெளிக்கொணரும் வழி தெரியாமல் திண்டாடும் குடும்ப உறுப்பினர்களின் மன உணர்வுகளும் அழகாகக் காட்டப்பட்டிருக்கிறது. வலி, கழிவிரக்கம், வெறுப்பு, குரோதம் என அன்பின் பல பரிமாணங்களை மிக நுணுக்கமாக இந்நாவல் பேசுகிறது. 

பல காட்சிகள் மறுபடியும் மறுபடியும் சொல்லப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் கதைக்குத் தொய்வு வராத எழுத்து நடை அவற்றைக் கடந்துவிட உதவுகிறது. பேச்சு வழக்கில் சொல்லப்படும் இந்தக் கதையில் சொலவடைகளும், பழமொழிகளும் அழகாகப் பொருந்தியிருக்கின்றன.

விநாயகத்துடன் சேர்ந்து வாழ்ந்த போதிலும் அவனிடம் என்றும் ஒரு விறைப்பையும் பொருட்படுத்தா தன்மையையும் காட்டியபடியே வாழும் கமலா. பெற்றோர், மாமனார் சொத்துகளை நிர்வகிக்கும் அவள் யாரையும் சாராமல் வாழுகிறாள். ஆனால் அவள் மீது சபலம் கொண்டு நெருக்கடி கொடுக்கும் வயதான சி.இ.ஒவை ஒரு கட்டத்தில் ஏற்கிறாள். எந்த பொருளாதார நெருக்கடியும் இல்லை என்னும்போது, வேலையை விட்டாலும் அவளால் வசதியாய் வாழ முடியும் என்ற நிலையில் அவள் ஏன் இந்த முடிவுக்கு வந்தாள் என்பதற்குச் சரியான காரணங்கள் எதுவும் நாவலில் சொல்லப்படவில்லை. சுயமரியாதையுடன் வாழும் ஒரு நவீனப் பெண்ணாகக் காட்டப்பட்டிருக்கும் கமலா எடுக்கும் சில முடிவுகள் புதிராகவே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் சமூகம் அவளுக்குக் கொடுக்கும் அவப்பெயரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதைப் போன்ற ஒரு பிம்பத்தை நாவல் கொடுக்கிறது. அதில் ஒருவித மன அமைதியும் அடைவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. அது மிகவும் நெருடலான விஷயமாகப் படுகிறது. சிறிது தவறினாலும் கதை வேறு கண்ணோட்டம் பெற்றுவிடக்கூடிய நிலையில், ஆசிரியர் அதைக் கையாண்ட விதம் குறிப்பிடத்தக்கது.

கமலாவின் பார்வையில் இந்தக் கதை சொல்லப்படவில்லை என்றாலும்  நாவல் வாசிப்பில் கமலாவைச் சுற்றியே  மனம் அலைந்து கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. விநாயகத்தின் மனவோட்டங்களைத் தெளிவாகச் சுட்டியிருக்கும் ஒவ்வொரு காட்சியிலும், கமலாவின் தரப்பில் இருந்து ஊகிக்கும் முயற்சியாகத்தான் என் வாசிப்பு அனுபவம் அமைந்தது. மேலோட்டமாகப் பார்க்கையில் ஓர் ஆண் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக இருந்தாலும், சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத உறவினால் ஒரு பெண் எதிர்கொள்ளும் வாழ்வியல் நெருக்கடிகளையும், நுண்ணிய மன உணர்வுகளையும் மிகவும் அழுத்தமாகவும் இயல்பாகவும் பதிவு செய்திருக்கிறது ‘எங்கதெ’ நாவல். 

Thursday, November 10

புத்தனின் விரல் பற்றிய நகரம் - அய்யப்ப மாதவன்கவிஞர் அய்யப்ப மாதவனின் ’புத்தனின் விரல் பற்றிய நகரம்’ கவிதை நூல் சில நாட்களாக என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. கவிதைகள் மறுவாசிப்பு, மறுவாசிப்பு என என்னை உள்வாங்கிக்கொண்டிருக்கின்றன. மீள் வாசிப்பில் பல கவிதைகள் பரிமாண மாற்றங்கள் தந்து நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றன. அந்தத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்…

கருங்கல் பழக்கங்கள்

கருங்கல்லில் ஒளிந்திருக்கும்
கடவுளை தரிசிக்க
மணிக்கணக்கில் தவம்
மனம் பதற நிமிட நேர தரிசனம் கவிதைகள்
கைகூப்பி வணங்கினால்
கடவுளின் கூலியாள் விரட்டுகிறான்
அருள் வாங்கிப்போகிறது முகம்
சாம்பல் பூக்கும் நெற்றியுடன்
கருங்கல் பழக்கங்கள்.

  கவிஞனாகிய அற்புதம்

மஞ்சளாக மாறுகிற நிலவின் அதிசயத்தில்
வண்ணங்களைக் குறித்து
இதயத்தைக் கிளறுகிற அந்தியில்
சாலையில் மஞ்சளுடுப்பில் மஞ்சள் பூச்சூடி
வடிவாகச் செல்லும் பெண்ணில்
நிலவை விரல் நீட்டி குழந்தமையை நினைவூட்;டும்
குழந்தையில்
பிரிந்த காதலியின் கண்ணீரில்
உதிர்த்துப்போட்ட இலைகளின் குவியலுக்குப்பின்
நிற்கும் மொட்டைமரத்தின் பேரிழப்பில்
குப்பைகளைக் கிளரும் பூனைகளின் பசியில்
கோடையைத் தாங்கும் இலையடர்ந்த
பச்சை இலைகளின் கவர்ச்சியில்
கண்களைக் குச்சியில் பொருத்தி நடந்துபோகும்
குருடனில்
அமைதியிலுறைந்த புல்லாங்குழல்களைக் கூவி
விற்பவனில்
கயிறில் நடக்கும் சிறுமியின் விழுந்துவிடும் அபாயத்தில்
வசந்தம் தொடர உலகே மலர்களாகிச் சிரிக்கும்
காலத்தில்
முகில்கள் கருத்துச் சொட்டும் திடீர் மழையில்
அடம்பிடிக்கும் அடைமழையில்
தெறித்து உடல் நனைக்கும் சாரலில்
குடை மறந்து கொட்டும் மழையில் நனைதலில்
புழுங்கும் போது மரமசைந்து வரும் தென்றலில்
மழைக்காலம் முடிந்து துவங்கும் பனியின் நடுக்கத்தில்
பகலை வரையும் பரிதியில் இரவைத் தீட்டும்
வான்சுடர்களில்
என் உயிரின் மர்மத்தில் இவ்வுலகில் தோன்றியதில்
சொற்களால் கவிஞனாகிவிட்ட அற்புதத்தில்
விடுபடமுடியாத பால்யத்தில்
பறந்த வண்ணத்துப்பூச்சிகளில் விட்டில்களில்
மீன்களில்
உலகைக் காட்டிய என அம்மாவில்
அன்பின் உருவமான தகப்பனில்
தம்பி தங்கை ரத்தத் துடிப்புகளில்
நட்பில் படர்ந்த உயிரில் ஒரு கவிதை விரிகிறது
அனுபவத்தில் ஒரு சொல் பல சொல்லாகி
வாழ்வாகி புனைவாகி எழுதி முடிக்கப்பட்டவை
சுவரில் மாட்டிய காணக் கிடைக்காச் சித்திரங்கள்.

       தனிமையும், நிராகரிப்பின் வலிகளும், புறக்கணிப்பின் துயரங்களும், ஆங்காங்கே இழையோடி இருக்கும் நகரத்தின் வெறுமையான தெருக்கள், கனவுகளைச் சுமந்து நிற்கும் வீடுகள், வான வெளியாகி நகரும் அறைகள், விற்கப்படும் பூட்டப்படாத கதவுகள், காட்சிகளைக் கையகப்படுத்தும் ஜன்னல்கள் என எனது விரல் பிடித்து அழைத்துச் செல்கிறது ’புத்தனின் விரல் பற்றிய நகரம்’.கோடைகாலக் குறிப்புகள் - சுகுமாரன்
  
எறும்புகள் சுமந்து போகும் பாம்புச் சட்டை போல
நகர்கிறது வாழ்க்கை”

தலையிலிருந்து முதுகெலும்பு வழியாக
வெட்டப்பட்ட பிணம் நான்”

“இப்போது அன்பு
சவரக்கத்தியின் பளபளக்கும் கூர்முனை”

”பூக்களில் வழியும் ரத்தத்துக்கும்
துடைக்க நீளும் சுட்டுவிரலுக்கும்
இடையில்
பறந்து தடுமாறுகிறது கிளி”

       நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் இடையிலான ஊசலாட்டமாக விரியும் வாழ்வின் சூட்சமங்கள், சுயம் சார்ந்த துக்கம், உள்ளத் தகிப்பு, அகச்சீற்றம், தனிமை, குடும்ப உறவுகளின் சிதைவு, இயற்கையுடன் இயைந்து உறவுகொள்ளுதல் என ஒரு தனிமனிதனின் உள் மற்றும் வெளி உலக அனுபவங்களை நுட்பமான அவதானிப்புகளின் வழி அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கும் எதார்த்தமான கவிதைகள்.

நிகழ்

விலக்கினாலும் கவிகிறது புகை
எதிலும் இடறிக் கொள்ளாமல்
களைந்து திரியவே தவிப்பு
கண்ணாடி முன் நின்றால்
கழுத்துக்கு மேலே வெறும் பெயர்
என்னைக் காணாமல் துடித்து
உள்கசியும் ரத்தத்திலும் சீழிலும் மட்கும் கணங்கள்
கால்கள் சிக்கிப்
பறக்கத் தத்தளிக்கும் நான்…

       கவிதைகளுடன் உரையாடி அதை அசைபோடும் அனுபவம் நல்கி என்னை ஆக்கிரமித்திருக்கின்றன சுகுமாரனின் ’கோடைகாலக் குறிப்புகள்’

      

குற்றப் பரம்பரை - வேலராமமூர்த்திகள்ளர் இன மக்களின் வாழ்வை, அவர்களின் சமுதாய நிலைப்பாட்டை, அவர்களுடன் வாழ்ந்த மற்ற சமூகத்தினர் என வெவ்வேறு தளங்களில் வாழும் மக்களின் வாழ்வியலை குற்றப்பரம்பரை என்னும் நாவல் மூலமாக பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி.
முதல் முறை வாசித்தபோது கதையும், உணர்வுகளும், விறுவிறுப்பான நடையுமாக ஒரே மூச்சில் வாசிக்க வைத்தது நாவல். மறுவாசிப்பில் எதார்த்த மொழி, சிக்கன வார்த்தைப் பிரயோகம், ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வியல் தர்க்கங்களை எழுத்தாளர் வெளிப்படுத்தி இருக்கும் விதம் ஆகியவை புரிபட்டன.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், தென் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்த கள்ளர்கள் சமூகம் மற்றும் அவர்களின் வாழ்வியல், சுக துக்கங்கள் என்று அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார். 
காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் கள்ளர் கூட்டத்தைப் பிடிக்க முயலும் சர்காரிடம் இருந்து சில பல உயிர்களைப் பலிகொடுத்து தப்பி, கொம்பூதி என்னும் மலைக்கிராமத்தில் தங்கள் மறுவாழ்வைத் தொடங்குகிறார்கள் கள்ளர் இன மக்கள். தங்களுக்கு இணக்கமாக வாழும் பெரும்பச்சேரி கிராமத்திற்கு உதவி செய்யப் போய் பெருநாழி கிராமத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்கின்றனர். கள்ளர்களைக் கட்டுப்படுத்த போலீஸ் கச்சேரியை அணுகுகிறது பெருநாழி கிராமம். போலீஸ் கச்சேரியின் ஒரு அதிகாரியை விரட்டியும், அடுத்து வருபவரைக் கொன்றும் போலீஸின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறது கள்ளர் கூட்டம். இறுதியில் சிறு வயதில் காணாமல் போன கள்ளர் கூட்டத் தலைவர் வேயன்னாவின் மகன் சேது போலீசாக வந்து அவர்களைக் களவு செய்யவிடாமல் தடுக்கிறானா இல்லையா என்பதுதான் கதை.
     இடையிடையே வரும் வஜ்ராயினி, நாகமுனி, ஹசார் தினார், மான் என மையக் கதையிலிருந்து விலகும் கிளைக் கதை மாய எதார்த்த வகையைச் சார்ந்தது என்று சொல்லலாம். இரத்தமும் சதையுமான மையக் கதைக்குச் சற்றும் பொருந்தாமல் சிறுது தொய்வைக் கொடுப்பதாகவே எனக்குப் படுகிறது.
      களவின்போது நேரும் இழப்புகளும் வலிகளும் உயிர்ப்புடன் காட்டப்பட்டுள்ளது. ஒரு புறம், கரணம் தப்பினால் மரணம் என்று உயிரைப் பணயம் வைத்துக் களவுசெய்யும் பொருளை, அதன் மதிப்பு தெரியாமல் தானியத்துக்கு விற்று வாழும் சமூகம். இப்படியெல்லாம்கூட வாழ்ந்திருக்கிறார்களா என்று வியப்பும், இவ்வாறு வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான சமூக அவலங்களை நினைத்து வேதனையும் ஒரு சேர என்னை ஆக்கிரமித்தன.
தன்னை வல்லுறவு செய்யும் வெள்ளையனைத் தன் தலைமுடியாலேயே கழுத்தை இறுக்கிக் கொல்லும் இருளாயி, காவல் துறையினரின் வன்முறையை எதிர்க்கும் கூழானி கிழவி போன்று பெண்களைத் துணிச்சலானவர்களாகவும் சுதந்திரமாக இயங்குகிறவர்களாகவும் காட்டியுள்ளார்.  
வெறும் தகவல்களாக அல்லாமல் வாழ்க்கையை, மனித உணர்வுகளை, மண்ணின் தன்மையை, சில நிகழ்வுகளின் வழி நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தி வித்தியாசமானதொரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது ‘குற்றப்பரம்பரை’ நாவல்

Wednesday, November 2

சிறகுகள் முறியும் - அம்பை


பெண்களின் இயல்பான சுபாவத்தையும், அவர்கள் இயல்பைத் தொலைக்க வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாவதையும், சமூகம் அவர்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கும் மனத்தடைகளையும் தனது எழுத்தின் மூலம் அடையாளப்படுத்தி இருப்பவர் அம்பை. பெண்களின் நுண்ணிய உணர்வுகளையும், பெண்களுக்கு எதிரான சமூகக் கோட்பாடுகளின் மீதான கோபங்களையும் வெளிப்படுத்தும் கதை ‘சிறகுகள் முறியும்.’
திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கங்களை உண்டாக்குகிறது என்பதையும், இது போன்ற சமூக நிலைப்பாடுகளால் பெண்கள் எப்படி எல்லாம் பாதிப்படைகிறார்கள் என்பதையும் ஒரு பெண்ணின் உணர்வுகளின் வாயிலாகத் தெளிவாகச் சித்தரித்திருக்கும் கதை. 
1970 களில் இல்லத்தரசிகளின் நிலையையும் வாழ்வையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது. வழக்கமாக எல்லா பெண்களையும்போல் திருமணத்திற்குப் பிறகு அம்மாவிடம் தான் இன்னும் அணுக்கமாக இருந்திருக்கலாமோ என்ற எண்ணத்தையும், அம்மாவைத் தான் படுத்திய பாட்டையெல்லாம் நினைத்து அவள் அருகாமைக்கு ஏங்குவதையும் இயல்பாகச் சொல்லியிருக்கிறார்.
தன் சுயசிந்தனைக்கு இடம் கொடுக்காத பல சட்டங்களை உருவாக்கி வைத்திருக்கும் சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண், தனக்குப் பிடிக்காத அத்தனைக்கும் தனக்குள்ளேயே சட்டங்கள் இயற்றி மனத்தளவில் கற்பனை செய்துகொள்கிறாள். கணவனுக்கான சட்டத்தை தான் இயற்றுவதும், தண்டனை கொடுப்பதுமாக அவளின் சிந்தனைகள் முழுதும் சமூகத்தின் மீதான கோபத்தைப் பிரதிபலிப்பதாகவேவே இருக்கிறது. ஏமாற்றங்களை எல்லாம் அழிக்கும் முயற்சியாய் கற்பனை வாழ்வில் சிறகடிக்கிறாள்.
ஒவ்வொறு விஷயத்திலும் மன ஈடுபாட்டைத் தொலைத்த ஒரு இயந்திரத்தனம் புகுந்துகொள்ளத் தொடங்குவதாக உணர்கிறாள். ஒரு கட்டத்தில் அவள் கணவனின் குணம் தன் மீதும் படித்துவிட்டதை அறிந்து அதிர்ச்சி அடைகிறாள். தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ளத் தொடங்குகிறாள்.
     அவரது படைப்புக்களை அந்த காலகட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அம்பையின் எழுத்து பெண்ணியம் பேசுவதோடு மட்டுமல்லாமல் அன்றைய காலகட்டத்தின் வாழ்வியலையும் பதிவு செய்திருப்பதாகவே தோன்றுகிறது. வெறும் பெண்ணியம் மட்டுமில்லாது நல்ல அங்கதம் தெறிக்கும் அவரது எழுத்து நடையும் வசீகரம்.
அவர் காலத்தில் பெண்கள் ஒரு குறிப்பிட்ட சிறு வட்டத்துக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்க, எழுத்தாளர் அம்பை பெண்களின் வாழ்க்கையை வேறு ஒரு கட்டத்திற்குக் கொண்டுபோய்ச் சுயசிந்தனை கொண்ட பெண்களைத் தன் கதைகளில் படைத்துள்ளார். அந்தக் காலத்தில் எப்படியெல்லாம் விமர்சித்திருப்பார்கள், எத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்திருப்பார் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.

Tuesday, November 1

அவர் அப்படித்தான்அலுவலக இருக்கையில் அமர்ந்ததும் பின்னுக்குச் சாய்ந்து கண்களை மூடினேன். அத்தனை கவலைகளையும் துடைத்துவிடும் முயற்சியாய் பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. மிகவும் அயற்சியாக இருந்தது. இந்தச் சண்டை எப்படி ஆரம்பித்தது என்றே தெரியவில்லை. எங்கெங்கோ சென்று எதிலோ வந்து முடிந்திருக்கிறது. எதற்கு, ஏன் என்பதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வீசப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் அவரவர்களுக்குத் தேவையான அர்த்தங்கள் பெற்று பூதாகரமாகி மனதை ஆக்கிரத்துவிடுகின்றன. கணினியை உயிர்ப்பித்தேன். வேலைகள் வரிசை கட்டிக்கொண்டு நின்றன. சே! என்ற ஒரு தலையசைப்பில் மனத்தின் கூச்சல் அனைத்தையும் உதறிவிட்டதாய் நினைத்துக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

     சில்லரைச் சண்டைகள் எப்போதும் நடப்பதுதான் எங்களுக்குள். ஆனால் அதற்குப் பிறகான தாக்கம் இப்போதெல்லாம் அதிகரித்து விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. யார் முதலில் பேசுவது என்பதில் தொடங்கி, ஈகோ தலைதூக்க சமாதானத்திற்கான காலமும் நீண்டு கொண்டே போகிறது. அலுவலகம் வந்ததில் இருந்து பத்தாவது முறையாக அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். அவரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்திகூட இல்லை. ஏமாற்றம் என்று சொல்ல முடியாது. இதெல்லாம் சண்டை நாளின் சகஜமாகிப் போயிற்று. ஆனாலும் எதிர்பார்ப்பதை மட்டும் ஏனோ என்னால் நிறுத்த முடியவில்லை. ஏன் நீ கூப்பிட்டுப் பேசினால் என்ன? என்று கேள்வியெழுப்பிய மனசாட்சியைத் தலையில் தட்டி அடக்கினேன்.
அவருக்கு இது போன்ற எண்ணங்களோ அலசலோ இருப்பதற்கான சுவடுகள் எதுவும் தென்படவில்லை. அவர் எப்போதும் இப்படித்தான். சின்னச் சின்ன மனஸ்தாபங்களுக்குக்கூட முகத்தை உர்ரென்று வைத்துக்கொள்வார். நான் ஒருத்தி வீட்டில் இல்லவே இல்லை என்பதுபோல் நடந்துகொள்வார். ஒரு வாரம் ஆனாலும் பேசாமல் இருக்க முடியும் அவரால். அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் நான்தான் வலியச் சென்று பேசத் தொடங்குவேன். அதற்கென்றே காத்திருந்தவரைப் போல் பேசிவிடுவார். அப்படியே சகஜ நிலைக்குத் திரும்புவோம். ஆனால் அன்றைய நாளின் சண்டைக்கான காரண காரணிகளை ஆராய்ந்து இனி நடக்காமல் இருக்க ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டும் என்ற என் எண்ணம் மட்டும் ஈடேறியதே இல்லை. இந்த முறையும் அதுவே தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை.
     அலுவலகத்தில் ஒவ்வொருவராக எழுந்து போவதைக் கண்டதும்தான் மணியைப் பார்த்தேன். மதியம் ஒன்று. செல்வி இன்று அலுவலகத்திற்கு வரவில்லை. அவள் வந்திருந்தால் இந்நேரம் என் முகத்தை வைத்தே என் மன உளைச்சலைக் கண்டுபிடித்து ஆசுவாசப்படுத்தி இருப்பாள். அவளைப் பொறுத்தவரை சின்னச் சின்ன சண்டைகள் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ள உதவும். தாம்பத்திய வாழ்க்கையைப் பலப்படுத்தும். அவள் அப்படித்தான் பேசுவாள் ஏனென்றால் அவளுடைய கணவர்தான் விட்டுக் கொடுத்துப் போவார். ஆனால் என் கதை அப்படி இல்லையே.
 “யார் விட்டுக் கொடுத்தால் என்ன? ஒருத்தர் இல்லைனா இன்னொருத்தர் விட்டுக் கொடுக்கப் போறோம். அவ்வளவுதானே? நீ பேசியும் பேசாம இருக்காரா? அப்படினாதான் நீ கவலைப்படணும். ஒவ்வொரு வீட்டிலும் என்னெல்லாம் கொடுமை நடக்குது தெரியுமா?” என்பாள்.  கெட்டப் பழக்கங்களில் தானும் அழிந்து குடும்ப நிம்மதியையும் குலைக்கும் ஆண்களைப் பற்றிக் கூறுவாள். எல்லாம் சரிதான். அவர் நல்லவர்தான். அத்தனையிலும் சமத்துவம் பேசுவார். நண்பர்கள் போல்தான் நானும் என் கணவரும் இருப்போம். ஆனால் ஏதேனும் மனஸ்தாபம் என்று வந்துவிட்டால் அதெல்லாம் காணாமல் போய்விடும். செல்வி இன்று அலுவலகத்திற்கு வராததும் நல்லதுக்குத்தான். தனியாகப் பிரச்சனைகளை அலசி ஒரு முடிவுக்கு வரலாம்.
     காண்டீனுக்கு நடந்தேன். அலைபேசியின் அழைப்பு ஒரு சில நொடி எதிர்பார்ப்பைக் கிளறி விட்டது. அம்மா! சிறு ஏமாற்றத்துடன் பேசத் தொடங்கினேன். எப்போதும் போல் ‘சாப்பிட்டாயா?’ என்று ஆரம்பித்து இன்று மாலை யிசூன் கோவிலுக்கு வருவதாகவும் அப்படியே எங்கள் வீட்டிற்கும் வருவதாக இருப்பதுமான தகவலுடன் முடித்தார். சண்டையின் பின் விளைவுத் தாக்கம் என் அம்மா வரை நீள்வதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை. அம்மாவிடம் நடந்ததைச் சொல்லும்படி ஆயிற்று. என் பக்கத்து நியாயங்களையும் மனக் கவலைகளையும் கொட்டிவிடத் துடிக்கும் மனத்தை அடக்கிச் சுருக்கமாகச் சொல்லி முடிப்பதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. ஏதேனும் அறிவுரைகளை எதிர்பாத்த எனக்கு, மறுமுனையில் அம்மாவின் சிறு சிரிப்புதான் கிடைத்தது. என்ன ஏது என்ற மேல் விசாரிப்புகள் எதுவும் இன்றி
“சரி சரி. நீ பார்த்துக்கோ. வீக் எண்ட் முடிஞ்சா வீட்டுக்கு வாங்க”
என்றபடி தொலைபேசியை அணைத்தார். வார இறுதி வரைதான் உங்களுக்கு அவகாசம். அதற்குள் சரி செய்து கொள்ளுங்கள் என்று சொல்வது போல் இருந்தது. இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று எண்ணத் தொடங்கினேன். இன்று வெள்ளிக்கிழமை என்பதும் நினைவுக்கு வந்தது.
 அம்மா எப்போதுமே இப்படித்தான். அவளால் எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடிகிறது. எங்கள் திருமணத்திற்குப் பிறகு, முதல் முறை அவர் கோபப்பட்டுப் பேசாமல் இருந்த போது திகைத்துப் போய் நின்றேன். எப்படி நடந்து கொள்வது என்றே புரியவில்லை. அம்மா என்ன செய்வார்கள் என்றுதான் நினைவு படுத்திப் பார்த்தேன். அவர்களுக்கு இடையேயான வாக்குவாதங்கள் எங்களை வந்து தாக்காமல் பார்த்துக் கொள்வதில் அம்மா பெரும் பங்கு வகித்ததாகவே தெரிகிறது. அப்பாவின் சத்தம் கேட்ட அளவிற்கு அம்மாவின் குரல் ஓங்கி ஒலித்ததில்லை. ஆனால் அழுத்தமான ஓரிரண்டு வார்த்தைகளில் வேண்டியதைச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவாள். கல்யாணமாகி ஒரு வருடம் முடிந்தும் இன்னும் அந்தக் கலை எனக்குக் கைவரவில்லை. சட்டென்று கோபமும், அதற்கும் முன்பாக அழுகையும், அதையும் முந்திக் கொண்டு வார்த்தைகளும் என் அனுமதிக்கெல்லாம் காத்திருக்காமல் தெறிக்கத் தொடங்கி விடுகின்றன. முடிவில் சொல்ல நினைத்ததைத் தவிர மற்றவை எல்லாம் சொல்லி இருப்பேன். அவர் அதைப் பிடித்துக் கொண்டு தொடங்கி விடுவார். நான் பேசியது எல்லாம் எனக்கு மறந்து போய் விடும். அவரின் வார்த்தைகள் அப்படியே மனத்தில் ஒட்டிக் கொண்டு அரிக்கத் தொடங்கி விடும். இதுதான் வழக்கம் என்றாகிவிட்டது.
இன்றோடு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இப்போது நாங்கள் இரண்டு பேர் மட்டும் என்பதால் பரவாயில்லை. குழந்தைகள் பிறந்து, அடுத்த கட்ட வாழ்க்கையில் இது வேறு மாதிரியான பாதிப்புகளை உண்டாக்கலாம். அவர் இதைப் பற்றி எல்லாம் யோசிக்கப் போவதில்லை. நான்தான் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கொடி தூக்கக் கூடாது. இதையெல்லாம் யோசிக்கிறேனே தவிர, எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை.
அலுவலகத்தில் இருந்து கிளம்பினேன். இன்றில் இருந்தே தொடங்கிவிட வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக அவரிடம் இதைப் பற்றிப் பேசிப் புரிய வைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் சண்டை போட்டுச் சமாதானம் ஆவதைவிடப் பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று எடுத்துச் சொல்ல வேண்டும். இன்று வீடு போனவுடன் அவர் கோபத்தில் உணர்வுகளைக் கொட்டினாலும் பொறுமையாகக் கேட்டுப் பின் அமைதியாகப் பேச வேண்டும். நீண்ட நமது வாழ்க்கைப் பயணத்தில் சிறு சிறு சண்டைகள் வேகத்தடைகளாக மட்டுமே இருக்கட்டும். இடையூறாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். எப்படியும் இன்று அவரிடம் மனம் விட்டுப் பேச வேண்டும்.
இப்படிப் பல எண்ண ஓட்டங்களுடன் எப்போது எம். ஆர். டி ஏறினேன், வீடு வந்து சேர்ந்தேன் என்பதே தெரியவில்லை. எல்லாம் தனிச்சையாகவே நடந்திருக்கிறது. அவர் முன்பே வந்திருப்பதைத் தொலைக்காட்சி சத்தம் அறிவித்தது. என்னிடம் உள்ள சாவியைக் கொண்டு கதவைத் திறந்தேன். கையில் காபியுடன் உட்கார்ந்து இருந்தார். தொலைக்காட்சியில் இருந்து தலையைத் திருப்பி என்னைப் பார்த்து விட்டுத் திரும்பினார். நானும் குளித்துவிட்டு வந்து பிறகு பேசலாம் என்ற முடிவோடு ஹாலைக் கடந்து சென்றேன்.

“ஏன் வாட்டமா இருக்க? வேலை அதிகமோ? சூடா காபி கலக்கட்டுமா?”
என்னை நிறுத்தியது அவருடைய வார்த்தைகள். கேள்விகளை அடுக்கியபடியே என் பதிலுக்குக் காத்திராமல் எழுந்து சமையலறைக்குள் நுழைந்தார். மெளன யுத்தத்தையோ வார்த்தை அம்புகளையோ எதிர்கொள்ளத் தயாராகி வந்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கைப்பையை அங்கேயே போட்டு விட்டு அப்படியே உட்கார்ந்தேன். அவ்வளவு எளிதில் மாறக் கூடியவர் இல்லையே. கையில் காபியிடன் வரும் அவரையே உற்றுப் பார்த்தேன். காலைச் சண்டையின் பிரதிபலிப்பு எதுவும் இன்றி தெளிவாகத் தெரிந்தார். எனக்கும் நிம்மதியாகவே இருந்தது. அவசரப்பட்டு அம்மாவிடம் இதைப் பற்றிப் பேசியிருக்க வேண்டாமோ என்றுகூடத் தோன்றியது. அவரை சகஜத்திற்கு கொண்டு வரும் ஒரு பெரிய வேலை இன்று இல்லாமல் போய் விட்டது. இதுதான் நல்ல சமயம். பேசி விட வேண்டும். சண்டையின் ஆணிவேரைக் களைந்து விடும் அவசியத்தை உணர்த்தி விட வேண்டும். திரும்பவும் சண்டையில் போய் முடியாமல் எப்படி நான் நினைப்பதை எல்லாம் சொல்வது என்று யோசித்துக் கொண்டே காபியை உறிஞ்சினேன். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு ஏதோ பேசுவதற்கான தோரணையில் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார்.
“இன்னைக்கு காலைல…”
என்று நான் தொடங்கியதைக் கவனிக்காதது போல
“டின்னருக்கு வெளியே போகலாமா?”
என்று கேட்டுவிட்டு என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார் பதிலுக்காக. அவரின் கெஞ்சலான முகம் பார்த்ததும் மற்றவை மறக்கத் தொடங்கின. இன்றேதான் பேச வேண்டுமா என்ன? இப்போது தொடங்கி மறுபடியும் சண்டையில் போய் முடிந்து விட்டால்? நாளை பேசிக் கொள்ளலாம். பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற எண்ணத்தையும், சேகரித்த அத்தனை வார்த்தைகளையும் சிரமப்பட்டு விழுங்கினேன்.
“எங்கே போகலாம்?”
என்றபடி எழுந்து வெளியே கிளம்பத் தயாரானேன் இந்த நேரத்தின் சந்தோசத்தை இழப்பதற்கு மனமில்லாமல்.
இந்த வயதில்…”இந்த வயசுல இப்படி நடந்துக்கறீங்களே, உங்களால சும்மா இருக்க முடியாதா?”
வெளியில் போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் குமாரின் கேள்விகளே கண்ணபிரானை வரவேற்றன. அவர் எதுவும் பேசவில்லை. தலை குனிந்தவாறே ஹாலைக் கடந்து செல்ல முயன்றார். சமையலறையில் இருந்து மருமகளின் குரல்,
“இப்படியே போனா என்ன அர்த்தம்? கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கறீங்களா? உங்களுக்கு என்ன குறை வச்சோம்? ஏன் இப்படி எங்க மானத்த வாங்கற மாதிரி நடந்துக்கறீங்க?”
அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. இன்றைக்கு நேற்று இல்லை, ஆறு மாதங்களாகவே இப்படித்தான் நடக்கிறது. அவர் சொன்ன பதில் எதுவும் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை போலும். கேள்விகள் துரத்திக் கொண்டே இருந்தன. இப்போதெல்லாம் பதில் சொல்வதையே நிறுத்தி விட்டார். அறைக்குள் சென்று கதவைச் சாத்தும்போது
”இதெல்லாம் சரிப்பட்டு வராது குமார், பேசாம முதியோர் இல்லம் எதிலயாவது சேர்த்திடலாம் “
என்று மருமகள் சொல்வது கேட்டது.     

சட்டையைக் கழற்றி மாட்டும்போது கண்ணாடியில் அவர் உருவத்தைப் பார்த்தார். சவரம் செய்யாத முகமும், கண்களைச் சுற்றிய கருவளையுமும், தளர்ந்து போன உடலும், ஆறுமாதத்தில் இரண்டு மடங்கு வயது கூடிவிட்டதைப் போல் தெரிந்தது அவருக்கு. மூக்குக்கண்ணாடியைக் கழற்றிவிட்டு தொப்பென்று கட்டிலில் உட்கார்ந்தார். கழுத்தில் மாலையோடு அவருடன் சிரித்துக் கொண்டு நிற்கும் மனைவியின் புகைப்படம் மேஜையில் இருந்தது. அதைப் பார்த்ததும், இவள் மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாக இதெல்லாம் நடந்திருக்காது என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டார். மனதுக்குள் அத்தனை விஷயங்கள் குழம்பிப் போய் வலம் வந்தன. ஒவ்வொன்றாக தனியே பிரித்து அலசி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற முனைப்புடன் சிந்திக்கத் தொடங்கினார்.

ஜானகியுடன் வாழ்ந்தது என்னவோ சில வருடங்கள்தான். அவள் இறந்தபோது குமார் பி.எஸ்.எல்.ஈ தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருந்தான். அப்போது தொடங்கியது ஓட்டம். வேறு எந்த சிந்தனைக்கும் இடமில்லாமல் வேலையிடம், வீடு, மகன் என்றே ஓடிக் கொண்டிருந்தார். பத்து வருடங்களுக்கு முன்பு ஹார்ட் அட்டாக் வந்ததும், ஒரே மகனான குமார் இனி அவர் வேலைக்குப் போகவேண்டாம் என்று கூற, கட்டாய ஓய்வுக்குத் தள்ளப்பட்டார். 58 வயதுவரை அவருடைய அனுபவங்கள் சொல்லித் தராததை, இந்தப் பத்து வருட ஓய்வு வாழ்க்கை கற்றுக் கொடுத்திருந்தது.

  ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. அப்போது ஜுராங் வட்டாரத்தில் இருந்தார்கள். அங்கே அவருக்கு நிறைய நண்பர்கள். காலையில் அவர்களுடன் நடைப்பயிற்சி, ஈரச்சந்தைக்குப் போய் வருவது, மதிய நேரங்களில் ‘சீனியர் சிட்டிசன் கார்னரில்’ சில சீன நண்பர்களோடு மாஜோங், சதுரங்கம் விளையாடுவது, மாலையில் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்குப் போவது என்று ஓய்வு பெற்றவர்களுக்கென்றே விதிக்கப்பட்ட பொழுதுபோக்குகளோடு நன்றாகத்தான் கழிந்தன நாட்கள். ஆனால் விரைவிலேயே அவருக்கு அலுத்துப் போய் விட்டது.

குமார் யிசூன் வட்டாரத்தில் வீடு வாங்கி குடியேறியதும்தான் அவருக்கு சிரமமாகி விட்டது. நண்பர்களும் குறைவு. காலையிலேயே மகன், மருமகள், பேரன் எல்லாரும் கிளம்பிவிடத் தனிமை அவரை ஆட்கொண்டது. மறுமகள் சமையல் முதற்கொண்டு எல்லாம் முடித்துவிட்டுக் கிளம்பி விடுவாள். சில நேரங்களில் துவைத்தத் துணிகளை உலர்த்துவது, சில பாத்திரங்களைக் கழுவுவது போன்ற வேலைகள் இருக்கும். அவ்வளவுதான். அதுவும் அவராகவே முன் வந்து செய்வது. இவ்வளவுநாள் உழைத்ததற்கு இப்போதைய ஓய்வு தகும் என்ற எண்ணமே வரவில்லை. ஏதோ ஒன்றுமே செய்யாமல் இருக்கிறோமே, மற்றவர்களுக்கு பாரமாகி விடுவோமோ என்ற எண்ணம்தான் வலுவடைந்தது. பொருளாதாரப் பிரச்சனையும் கிடையாது. அவருடைய சேமிப்பு போதுமான அளவிற்கும் மேலாகவே இருந்தது. ஆனாலும் தண்டச்சோறு சாப்பிடுகிறோமோ என்ற எண்ணத்தை மட்டும் அவரால் துரத்தவே முடியவில்லை. தொலைக்காட்சி பார்ப்பதிலோ, திரைப்படங்கள் பார்ப்பதிலோ விருப்பமும் இல்லை.  அடுத்தத் தெருவில் இருக்கும் நூலகம்தான் அவர் தஞ்சமடையும் இடம். வேலை மிகுதியில் விட்டுப் போன புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைப் புதுப்பித்துக் கொண்டார்.
   அப்படி ஒரு நாள் நூலகத்தில் ’கார்ல் மார்க்ஸ்’ புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்த போதுதான், திருமதி ஜெரிக்கா அறிமுகம் ஆனார். அதே புத்தகத்தைச் சொல்லி எங்கே இருக்கிறது என்று கேட்டபோது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. பக்கத்து வீட்டில் வசித்தாலும் அதிகமாகப் பேசியது இல்லை அவரிடம். சிலநாட்களில் மின்தூக்கியில் காலை வணக்கம், ஒரு சிறு புன்னகை, தீபாவளி வாழ்த்துகள், சீனப்புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வதோடு சரி. இரண்டுபேரும் ஒரே புத்தகத்தைத் தேடுவது தெரிந்ததும் ஒருத்தர் படித்துவிட்டு மற்றவரிடம் கொடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் புத்தகம் இரவல் பெற்று அங்கிருந்து கிளம்பினர்.

‘எப்படி கார்ல் மார்க்ஸ் எல்லாம் படிக்கிறீர்கள்?’
அவர் கேட்டதும் ஒரு புன்சிரிப்புடன்
’ஏன் படிக்கக் கூடாதா? நான் முன்னாடியே படிச்சுட்டேன், இப்போ திரும்பவும் படிக்கத்தான் எடுத்தேன்’
பொதுவாகவே இது போன்ற புத்தகம் படிப்பவர்கள் மீது நல்ல மரியாதை அவருக்கு. ஜெரிக்கா ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் என்று தெரிந்ததும், இன்னும் அவர்மேல் மரியாதை கூடியது. ஆசியருக்கே உரிய கம்பீரமும் தெளிவும் இருந்தது அவரது பார்வையில். ஜெரிக்காவைப் பார்த்தது ‘நிமிர்ந்த நன்னடை நேர்க்கொண்ட பார்வை’ என்னும் பாரதியார் பாடல்தான் நினைவுக்கு வந்தது அவருக்கு. அவருடைய கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மகனும் மகளுமாக இரண்டு பிள்ளைகள். மகள் ஆஸ்திரேலியாவில் குடியேற, இவர் மகனோடு சிங்கப்பூரிலேயே தங்கியிருக்கிறார். ’எனக்குப் புத்தகம்தான் தோழி. தனிமையை வெல்லும் ஆற்றல் அவற்றிற்கு மட்டும்தான் உண்டு.’ இது அடிக்கடி ஜெரிக்கா சொல்லும் வாக்கியம். புத்தகப் பரிமாற்றம் மற்றும் புத்தகத்தைப் பற்றி அலசுவதுமாக அவர்களுக்கிடையே ஒரு நல்ல நட்பை உருவாக்கியதில் புத்தகங்கள்தான் பெரும்பங்கு வகித்தன.

ஜெரிக்கா வீட்டில் வேலைக்கு ஆள் எடுத்திருப்பதால் அவருக்கும் வீட்டு வேலைகள் என்று எதுவும் இருப்பதில்லை. பேத்தி உயர்நிலைப்பள்ளி முடித்து வரும் நேரம், அவளுடன் பேசியபடியே சாப்பாடு எடுத்து வைத்து சாப்பிட வைப்பது மட்டும்தான் அவர் வேலை. சில நேரங்களில் பேத்திக்கு பிடிக்குமே என்று சில உணவுகளை சமைப்பதுண்டு. மற்ற நேரங்களில் அவருடைய பொழுதுபோக்கு புத்தகம் படிப்பது, இசையில் லயிப்பது. இப்போது நண்பர் கண்ணபிரானுடன் உரையாடுவதும் சேர்ந்து கொண்டது.

            காலையில் 7 மணிக்கு கிளம்பி பார்க்கில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு, இரண்டு பேரும் திரும்பும் நேரம் அநேகமாக இரண்டு பேர் வீட்டிலும் அனைவரும் கிளம்பியிருப்பார்கள். காலை உணவுக்குப் பின் கண்ணபிரான் எப்போதும் காரிடாரில் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டு புத்தகம் படிப்பார். அப்படிக் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து படிப்பது அவருக்குப் பிடிக்கும். இப்போதெல்லாம் ஜெரிக்காவும் வந்து அமர்ந்து கொள்கிறார். படிப்பதையோ பாட்டு கேட்பதையோ வழக்கமாக்கிக் கொண்டார். அப்படியே பேச்சும் தொடரும்.

     தமிழ், சீன மொழிப் பரிமாற்றங்களும் அவர்களுக்குள் நடந்தன. செய்தித்தாள்களைப் படித்து அலசுவார்கள். இப்போதெல்லாம் செய்திகளில் நிறைந்து இருப்பது சிங்கப்பூர் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும் எப்படியெல்லாம் நடைபெறுகின்றன என்பதை ஆர்வத்துடன் கவனித்தனர். இத்தனை வருட சிங்கை வாழ்க்கையில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்குப் பேசுவதற்கு நிறைய விஷயங்களும் பகிர்வதற்கு நிறைய அனுபவங்களும் இருந்தன. கேட்பதற்குத்தான் ஆளில்லாமல் இருந்தது. இப்போது அப்படி ஒரு நட்பு கிடைத்துவிட்ட மகிழ்ச்சி இரண்டுபேர் முகத்திலும் தெரிந்தது. உடல்நிலையைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதும், அதற்கு அவரவர்க்குத் தெரிந்த கைமருத்துவம் சொல்வதுமாக அவர்களிடையே நல்ல அக்கறையும் கூடியிருந்தது.
     இதில் யார் கண் பட்டதோ? என்றுதான் முதலில் நினைத்தார். அதெல்லாம் ஒன்றும் இல்லை. பார்வைகளின் தரத்தைப் பொறுத்துதான் காட்சிகள் அர்த்தம் பெறுவதாகவே கண்ணபிரானுக்குத் தோன்றியது. முதன் முதலில் இது பற்றிக் குமார் கேட்ட நாள் நினைவுக்கு வந்தது.

     தொலைக்காட்சியில் இருந்து கண்ணை எடுக்காமலே வார்த்தைகளை மட்டும் வீசினான்.
       “என்னப்பா புதுசா நண்பர்கள் எல்லாம் கிடைச்சிருக்காங்க போலிருக்கே”
அவனின் கிண்டல் புரியாமல் கண்ணபிரான் ஆர்வத்துடன் சொல்ல ஆரம்பித்தார்.
“நானே சொல்லனும்னு நினைச்சேன். நீ பிஸியா இருந்ததால் சொல்ல முடியல. நம்ம பக்கத்து வீட்டு ஆன்ட்டிதான் குமார். ரொம்ப நல்லவங்களா இருக்காங்க .பாவம் அவங்களுக்கும் வீட்டில் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லையா? அதான்..”
  ”அதனால நீங்க துணையா இருக்கீங்களா? இந்த வயதில் இதெல்லாம் தேவையா உங்களுக்கு?” அன்று ஆரம்பித்ததுதான் ’இந்த வயதில்’ புராணம்.
இந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்து, சுதாரித்து அவர் பதில் சொல்லத் தொடங்கும் முன்பாகவே குமார் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, அவனது அறைக்குள் சென்றிருந்தான். கண்ணபிரான் அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும் மகனுக்குப் புரிய வைப்பது தன் கடமை என்றே தோன்றியது.

     அடுத்த சில நாட்களில் இது பற்றிய பேச்சு வந்தபோது மருமகளும் கூட இருந்தாள்.
 “எங்க இரண்டு பேருக்குள்ள நல்ல நட்பும் அக்கறையும் இருக்கு குமார். வயசான காலத்தில மனசு விட்டுப் பேசறதுக்கு ஒரு நல்ல ஆத்மா கிடைச்சிருக்கு. அவ்வளவுதான்”.

“ஏன் நாங்க எல்லாம் இல்ல?”  

”இந்த வயதில் இதெல்லாம் தேவையா உங்களுக்கு?” இந்த முறை மருமகள்.

இதற்கு எப்படி பதில் சொல்வது என்று அவருக்குப் புரியவில்லை.

”ஊர்ல எல்லாரும் தப்பா பேசறாங்க, இனிமே இப்படி நடந்துக்காதீங்க” அத்தோடு அன்றைய பேச்சுக்கு மட்டும்தான் முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது குமாரால். அவர்களுடைய நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இந்தப் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக ஊதி வெடிக்கத் தயாராகிவிட்ட நிலையில் இருக்கிறது. மருமகளின் பேச்சு அதை உறுதியும் செய்து விட்டது. அடுத்து என்ன? என்று யோசிப்பதுதான் மிகவும் கடினமான வேலையாக இருந்தது அவருக்கு.

இதைப் பற்றி ஜெரிக்காவிடம் பேச வேண்டும் என்று சில நாட்களாகவே நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார். போன மாதம் ஜெரிக்காவிற்கு கண் அறுவைசிகிச்சை நடந்து, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறார். இதெல்லாம் சொல்லி மனதையும் வருத்தப்படுத்த வேண்டாம் என்றுதான் தள்ளிப் போட்டார்.

இப்போது பேசியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தார். இதைப் போய் எப்படி அவரிடம் சொல்வது? தன் மகனைத்தானே அவர் தப்பாக நினைப்பார் என்ற எண்ணமும் வரத்தான் செய்தது. இதுவரை குடும்ப நிலவரங்களைப் பற்றியோ, பிள்ளைகளைப் பற்றி குறை சொல்லியோ அவர்கள் பேசிக் கொண்டதேயில்லை. பேசினாலும் பேரன், பேத்திகளைப் பற்றிய பெருமையாகத்தான் இருக்கும். எப்படி ஆரம்பிக்கலாம் என்று பல ஒத்திகைகள் நடத்தியவாறே அந்த இரவைக் கழித்தார்.
     மறுநாள் காலையில், காரிடாரில் தொட்டி செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தார் ஜெரிக்கா. எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று கண்ணபிரான் யோசித்துக் கொண்டிருக்கும்போது
“உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும். எப்படிச் சொல்றதுன்னுதான் தெரியல. கீழே கோப்பித்தியாம் போய் டீ சாப்பிடுவோமா?” ஜெரிக்கா கேட்டார். என்னவாக இருக்கும் என்று ஒருவாறு அவரால் ஊகிக்க முடிந்தது. இருவரும் கிளம்பிச் சென்றனர். காலை நேர பரபரப்போடு கடைகள் நிரம்பி வழிந்தன. ஆளுக்கு ஒரு தேநீரோடு ஒரு டேபிளில் உட்கார்ந்தனர். அந்தச் சத்தமான சூழலில் அவர்கள் இரண்டு பேர் மட்டும் பார்க்க அமைதியாகத் தெரிந்தனர். மனம் இடும் கூச்சலில் வெளியிடத்தின் ஆர்ப்பாட்டம் எதுவும் பெரிதாகப்படவில்லை இருவருக்கும்.

"ம். சொல்லுங்க.” என்றார் கண்ணபிரான்.
“கொஞ்ச நாளா வீட்டில ஒரே பிரச்சனை. எங்க வீட்டில் நான் உங்களோடு பேசுவதும் பழகுவதும் சுத்தமா பிடிக்கல. என் மகனும் என்னைக் கோபமா பேசிட்டான். எப்படி உங்கள்ட்ட சொல்றதுன்னுதான் இவ்ளோ நாளா யோசிச்சிட்டே இருந்தேன். வேலைக்காரிதான் ஏதோ சொல்லியிருக்கணும். என் பொண்ணுகிட்டயும் பேசிட்டாங்க. நான் சொல்லும் எதையும் புரிஞ்சுக்கற மாதிரி தெரியல. இப்போ எல்லாருமா சேர்ந்து என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்திடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க.” உறுதியாக ஆரம்பித்து தழுதழுத்தக் குரலுடன் முடித்தார். உடையத் தயாராக இருந்த கண்ணீரை விழுங்கும் அவர் கண்களை கண்ணபிரானால் கண்டு கொள்ள முடிந்தது. அங்கேயும் இதே போல் நடந்திருக்கும் என்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தலை குனிந்தவாறே “எங்க வீட்டுலயும்தான்” என்றார். ஜெரிக்கா லேசாகத் தலையசைத்தபடி ”நினைத்தேன்” என்று மட்டும் சொன்னார்.

”ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. மற்றவர்கள் பேசுவதானாலா, இல்லை என் அம்மாவிற்கு என்னைவிட யாரோ ஒருத்தர் முக்கியமாகிவிட்டார் என்ற கோபமா தெரியல. என்னவா இருந்தாலும் அவங்க செய்றது தப்பு” ஜெரிக்கா அவருக்கே உரிய பாணியில் பொறுமையாகப் பேசினார். கண்ணபிரானுக்கு எல்லாவற்றையும் மீறிக் கோபம்தான் வந்தது.
“இந்த வயதில் நம்மை இப்படி பேசறாங்களே, இதைவிட அவமானம் என்ன இருக்குது?” என்று கொதித்தார். ஜெரிக்காவின் சமாதானங்களை ஏற்று, எப்படி இதற்கு ஒரு முடிவு கட்டுவது என்பது பற்றி மட்டும் இரண்டு பேரும் பேசிக் கொண்டனர்.

 மற்ற ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு, பேப்பர் பேனாவுடன் சோபாவில் உட்கார்ந்து சிறுது நேரம் யோசனையில் ஆழ்ந்தார். மனதுக்குள்ளேயே மாற்றி மாற்றி எழுதி அழித்துக் கொண்டார். ஏதோ முடிவுக்கு வந்தவராய் எழுதத் தொடங்கினார்.


அன்புள்ள குமார்,
          நேரில் எதுவும் பேசும் அவகாசம் தரப்படாததால் கடிதத்தின் உதவியை நாடி இருக்கிறேன்.  எப்படி உனக்குப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் மனதில் உள்ளதை உன்னிடம் கொட்டி விட்ட நிம்மதியாவது கிட்டும் என்பதும் ஒரு காரணம்.
நானும் ஜெரிக்காவும் பழகுவது கொள்வது உனக்குப் பிடிக்கவில்லை. அதற்கான உண்மையான காரணம் என்னவென்று என்னால் ஊகிக்க முடியவில்லை. உன் அம்மா இறந்தபோது, எனக்கு 38 வயது. அப்போது வராத ஆசையா இந்த 68 வயதில் வந்து விட்டது என்று நினைக்கிறாய்? ஊர் பேசுகிறது என்பது ஒரு காரணம்தான். உன் உள்மனமும் அதையே பேசத் தொடங்கிவிட்டதை, உன் வார்த்தைகளின் வீச்சில் அறிந்து நொறுங்கிப் போனேன்.
நீ பதின்ம வயதுகளில் பெண் தோழிகளுடன் பழகும்போதுகூட நான் உன்னிடம் எதுவும் சொன்னதில்லை. ஏன் தெரியுமா? உன்மேல் இருந்த ’நம்பிக்கை’. பிரச்சனைகளில் சிக்கி விடக்கூடாது என்ற அக்கறையில் சில அறிவுரைகள் கூறியதோடு நிறுத்திக் கொண்டேன். அந்த நம்பிக்கை உன்னிடம் இல்லாமல் போய்விட்டது என் துரதிர்ஷ்டம்தான். புரிந்துகொள்ளும் முயற்சிக்குக்கூட நீ வரவில்லை. மேற்கொண்டு நான் உன் நிம்மதியைக் குலைப்பதாகவும் நம்பத் தொடங்கி விட்டாய்.

என் உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி வேண்டுமானால் உனக்கு  தெரிந்திருக்கலாம். ஆனால் மனம் ஏங்குவது எதற்கு என்று நீ புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. முதுமையில் தனிமை என்பது மகாக் கொடுமை. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும். அப்படி ஒரு வெறுமையில் உழன்றேன். உங்களையெல்லாம் நான் தவறாகச் சொல்லவில்லை. உங்களுடைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், எனக்காக நேரம் ஒதுக்குவது என்பது சிரமமாகி விடுகிறது. உன் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீதான் என்னைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டாய். ‘இந்த வயதில் இதெல்லாம் தேவையா உங்களுக்கு?’ என்று எத்தனையோ முறை கேட்டிருக்கிறாய். இந்த வயதில், எங்களுக்குப் பேசுவதற்கும், உணர்வுகளைப் பகிர்வதற்கும் ஒரு நட்புணர்வுடன் கூடிய சகமனிதன்தான் தேவைப்படுகிறான். அது ஆண் என்றோ பெண் என்றோ பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை. இதுவே என் நட்பு ஒரு ஆணுடன் என்றால் நீயோ, நீ சொல்லும் இந்த ஊரோ எங்களை எதுவும் சொல்லியிருக்கப் போவதில்லை. எங்களுக்குத் தேவை அக்கறையுடன் கூடிய நட்பு. இதை அனுபவங்கள் உனக்குப் புரிய வைக்கும்.
உன்னை அதிகம் சிரமப்படுத்த விரும்பவில்லை.  இந்த வயதில் எனக்கான சில முடிவுகளை, எனக்காக மட்டுமே எடுப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. நானே முதியோர் இல்லத்தில் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். இதனால் நம் உறவில் விரிசல் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். ஒருத்தருக்கு ஒருத்தர் தொந்தரவாகப் போய்விட்ட நிலையில் ஏற்பட்ட சிறு விலகல். அவ்வளவுதான். நீயும் குடும்பத்தோடு எப்போது நினைத்தாலும் என்னைப் பார்க்க வரலாம். இந்த அப்பாவின் பாசக்கரங்கள் உங்களை அரவணைக்க என்றுமே ஏங்கிக்கொண்டுதான் இருக்கும்.

பாசத்துடன்,
அப்பா.

வார்த்தைகளில் அழுத்தம் தெரிந்தாலும், நடுநடுவே உணர்ச்சி வசப்பட்டு நனைந்த கண்களைத் துடைத்தவாறே எழுதி முடித்தார். மறுமுறை படித்துப் பார்க்கக் கூடப் பிடிக்கவில்லை அவருக்கு. அதை ஒரு கவரில் போட்டு ஒட்டினார். அந்தக் கடிதத்தைத் தபால்பெட்டியிலேயே போட்டுவிடுவது என்ற முடிவுடன் கிளம்பினார்.

கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பியபோது, பக்கத்து வீட்டு ஜன்னல் பக்கம் அவர் பார்வை தனிச்சையாக சென்றது. அங்கே ஜெரிக்கா தீவிர ஆலோசனையுடன் கையில் பேப்பரும் பேனாவுமாக உட்கார்ந்து இருப்பது கண்ணில் பட்டது. நடையின் வேகத்தைக் கூட்டினார். வெட்டுப்பட்டச் சிறகுகள் மீண்டும் கிடைத்து விட்டதைப் போன்று மனம் நிம்மதியும், தெளிவும் பெற்றிருப்பது அவரது நடையின் துள்ளலில் தெரிந்தது.இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி - சங்க இலக்கியம்

            மனப்பாடப் பகுதியில் மதிப்பெண்களுக்காக படித்தது மட்டுமே எனக்கும் சங்க இலக்கியத்திற்குமான உறவு. கொடுக்கப்பட்ட உரை விளக்கம் தாண்டி எதையும் சிந்திக்க விடாத தமிழ் ஆசிரியர்களின் மொழிப்பற்று ஒரு புறம் இருக்க, மற்ற பாடங்களில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய காரணங்களால் தமிழ் என்றுமே மனப்பாடம் மட்டும்தான் என்றாகிப் போய் ரசனைக்கு அங்கே வேலையே இல்லாமல் போயிருந்தது. அவ்வப்போது சங்க இலக்கியம் என்ற வார்த்தை காதில் விழும் போதெல்லாம் படிக்க வேண்டும் என்று ஆசை தலை தூக்கும். ஆனால் மனப்பாடப்பகுதி தந்த மனக்கசப்பு திரை போட்டு அதை அடக்கிவிடும். ஆனால் ஆர்வம் மட்டும் விட்டபாடில்லை. சங்க இலக்கியம் வாசிக்கவில்லையே தவிர அதைப் பற்றிய வாசிப்பு அனுபவங்கள் எங்கே பார்த்தாலும் படித்துவிடும் ஆர்வம் இருந்தது. அவ்வாறு நிறைய கட்டுரைகள் படித்து மேலும் ஆர்வம் மேலிட குறுந்தொகை வாசிப்பில் நுழைந்தாகிவிட்டது. இத்தனை நாட்களாய் இவற்றையெல்லாம் வாசிக்காமல் விலக்கி இருக்கிறோமா என்று எண்ணி வெட்கும் அளவிற்கு குறுந்தொகையின் வீரியம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 
             மனித உணர்வுகள் அனைத்தும் அகம் புறம் என்ற இரண்டிற்குள் அடங்கிவிடுகிறது. சங்க இலக்கியங்களில் காட்டப்பட்டிருப்பதும் அவ்வாறான ஒரு நிலைப்பாடுதான். சொல்லப்படாத விஷயங்கள் என்று எதுவுமே இவ்வுலகில் இருப்பதில்லை. மனித மனங்களின் ஆழமான உணர்வுகளை, உள்ளம் சார்ந்த காதல் வாழ்வை, அவர்களின் நிலம் சார்ந்த பின்னணியில், மொழி நுட்பம் கூட்டி, காட்சிகளின் வழி கட்டப்பட்டிருப்பது குறுந்தொகை.
              எப்போதும் காதல், தலைவி தலைவனைப் பிரிவது, தலைவன் பரத்தையிடம் செல்லுதல், பசலை நோய் இதே தானா? வாழ்வை வேறு கோணத்தில் எதார்த்தமாக அணுகத் தொடங்கி இருக்கும் இக்கால கட்டத்தில் இதை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது? என் பகுத்தறிவு விழித்துக்கொண்டு கேள்வி கேட்காமல் இல்லை. ஆனால் அதன் படிமங்கள் சூழ்ந்த மொழி வளமும், கண்முன் விரியத் தொடங்கிய காட்சிகளுமாக என்னை உள்ளுக்குள் எளிதாக ஈர்த்துக்கொண்டது. சங்க இலக்கிய வாசிப்பு என்பது சங்க காலத்தின் வாழ்வியல் முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள மட்டும்தானா? அனுபவங்கள் மாறலாம். உணர்வுகள் ஒன்றுதானே! உணர்வுகள் உள் நகர்ந்து நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துவிடும்போது சங்கப்பாடல்கள் பல பரிமாணங்களைப் பெற்றுவிடுகின்றன.

நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

(குறுந்தொகை.6)
-பதுமனார்.

உலகமே உறங்கும் யாமத்தில் தலைவனைப் பிரிந்து உறக்கம் கொள்ளாமல் தவிக்கும் தலைவியின் மனப் புலம்பல்கள்.

‘சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள்’

சொற்கள் அற்ற தன்மையில் நிம்மதியான உறக்கம் எனக்கு மட்டும் இல்லாமல் போனதே என்ற ஏக்கம். காதல் பிரிவில் தன் இயல்பு தொலைத்தவளுக்கு, யாமத்தில் இயல்பாய் உறங்கும் மக்கள், விலங்கினத்தைக் குறிக்கும் ’மாக்கள்’ ஆகிவிடுகின்றனர்.
பதுமனார் நான்குவரிகளில் சொன்னதை, இரண்டே வரிகளில் திருவள்ளுவர் சொல்லிவிடுகிறார்.

காலைக்குச் செய்தநன்று என்கொல் எலன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை
---திருக்குறள் 1225


’ஊரு சனம் தூங்கிடுச்சு
ஊதக்காத்தும் அடிச்சிடுச்சு
பாவிமனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலையே…’ ஜானகியின் குழைந்த குரலில் இந்தப் பாடல் சொல்வதும் காதலால் உறக்கம் தொலைத்தவளின் உணர்வுகளைத்தானே.

பிரிவையும் காத்திருப்பையும் பற்றிப் பேசும் இன்னுமொரு கவிதை:

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமை தீய்ப்புஅன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.

(குறுந்தொகை.4)

-காமஞ்சேர் குளத்தார்.

’இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி’ எத்துணை ஆழமான கற்பனை! பொதுவாக நீர் என்பது தீயை அணைக்கும். இங்கே கண்ணீர் இமைகளைத் தீய்க்கிறதாம். பிரிவினால் ஏற்படும் கண்ணீர்த் துளிகள் இமைகளைத் தீய வைக்கும் அளவிற்கு வெப்பமாக இருக்கிறது என்று சொல்லும்போது பிரிவுத்துயர் தன்னை எந்த அளவுக்கு வாட்டுகிறது என்றே காதலி குறிப்பிடுகிறாள். ’நோம் என் நெஞ்சே!’ என்று மூன்று முறை கூறி தன் நெஞ்சம் படும் துயரின் மிகுதியை அழுத்தமாகப் பதிவிடுகிறாள்.
இந்தக் கவிதையில் என்னை மிகவும் கவர்ந்த வரி ‘அமைதற்கு அமைந்த நம் காதலர்’ என்பதுதான்.

என் கண்ணீரைத் துடைக்க வேண்டிய காதலன் என்பது ஒரு கருத்து. துயரைப் போக்க வேண்டியவனே அதற்கு காரணமாகும்போது அத்துயர் போக்க யார் உள்ளனர்?

’எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்’ என்பதுபோலவும் எடுத்துக்கொள்ளலாம்.

நான் இப்போது இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு நீதான் காரணம் என்பது.

என்னுடைய காத்திருப்பிற்கும் தனிமைத் துயருக்கும் காரணமாக அமைந்தவன். இதுவும் பொருந்தும்.

எனக்கென்றே பிறந்தவன். என்னுடன் காதல் வாழ்வைப் பகிர்ந்துகொள்ளவே பிறந்தவன்.

நான் அமைவதற்கு, அதாவது நான் உயிரோடு இருப்பதற்கே அவன்தான் காரணம். அவன்மேல் உள்ள காதல்தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது.

இப்படிப் பல அர்த்தங்களை பெற்ற அந்த வரிகள் வாழ்வைப் பின்னோக்கிப் பறந்து சென்று அனுபவிக்கும் சிறகுகள் கொடுத்தது. காதல் வாழ்க்கையை அசை போடுவது காதலைப் பன்மடங்கு பெருக்கிவிடுகிறது. ‘அமைதற்கு அமைந்த நம் காதலர்’ என்று வாழ்க்கைத்துணையை அடையாளப்படுத்திக்கொண்டு காதலைப் புதுப்பித்துக்கொள்ளும் உணர்வைக் கொடுக்கும்.

கவிதை வாசித்தல் என்பது படித்து, உணர்ந்து அதில் ஒன்றுவது மட்டுமில்லை. அதன் பல்வேறு வகையான சாத்தியங்களைக் கண்டடையும் முயற்சி. அவ்வாறு முனையும்போது மொழியின் கனம் குறைந்து, கவிதைகளின் உயிர்ப்பை உணர்ந்து ஒரு புதிய தரிசனத்தில் மனம் திளைக்கச் செய்கிறது.

Monday, October 24

குருதித் திவலைகள்


பெருமழையில் கழுவப்பட்டு
பழுத்துச் சிவந்த ரோஜா
நுரையீரல் முழுதும் மணம்
நிரப்பிடும் ஆவேசத்துடன்
செவ்விதழ் நுனியில்
முகம் பதித்து முகர்ந்தேன்

வெறும் உச்சி முகர்தலாய் இல்லாமல்
உள்வரை முகர்ந்துவிட்டேன் போலும்
முகத்தில் அடித்தாற்போல்
வேர்பிடித்த வெட்டுத்துண்டில்
ஒட்டியிருக்கும் பூர்வீக வீச்சம்.
Saturday, October 22

தரிசனம்சுயம் தொலைத்த கழிவிரக்கத்தில் 
துவண்டு போயிருந்த நேரம்
கிடைத்த அரிய வாய்ப்பில்
வெற்றிடத்தை நிரப்பும் 
காற்றின் வேகத்துடன்
தனிமையை நோக்கி பயணம்.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று 
பேசத் தேவையில்லை
அடுத்தவருக்கென்றே வார்த்தைகள் தேடி 
அலைய வேண்டியதில்லை
ஒவ்வொருத்தருக்குமாக முகமூடிகளை 
மாற்றிப் போடும் அவஸ்தையுமில்லை.
உள்ளத்தோடு சேர்ந்து மட்டுமே 
உதடுகள் சிரித்துக் கொள்ளலாம்.

உணர்வுகளைப் புதுப்பிக்கும் தருணமாக 
எனக்குள்ளே எட்டிப் பார்த்து 
அலசும் ஏகாந்த வேளையில்
இருட்டுக்குள் பயமுறுத்தும் 
ஆந்தையின் கண்களாய்
மனம் விழித்துக்கொண்டு 
வெறித்துப் பார்க்கத் தொடங்குகிறது.

சுட்டும் விழி எரிதழலின்
வெம்மைத் தாக்கம் தவிர்க்க
வெளியேற  எத்தனிக்கையில் 
ஆக்டோபஸின் கரங்களாய் 
எட்டுத் திக்கில் இருந்தும் 
கொஞ்சம் கொஞ்சமாக 
ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றன
கேள்விகளும் குற்றச்சாட்டுகளும்

மூச்சுத் திணறிப் போய் 
தனிமையைத் தள்ளிவிட்டு
வெளியேறுகிறேன்
தப்பிவிட்ட நிம்மதியுடன்.

சுவடுகள்எப்படி? எங்கு?
யாருக்கு? என்று?
எதுவும் தெரியாது எங்களுக்கு

பிறப்பின் அத்தனை சுவடுகளும்
மொத்தமாக அழிக்கப்பட்டு
பிறந்துவிட்டோம் என்னும்
உண்மையை மட்டுமே சுமந்து
வாழ அனுமதிக்கப்பட்டுள்ளோம்.

தொழில்நுட்பங்கள்
தொடர்ந்து முன்னேறுகிறதாம்
பிள்ளைகள் இல்லாதவர்களுக்குப்
பெற்றுத் தருகிறதாம் அறிவியல்.
பெற்றோர்களைப் பெற்றுத் தருமா
என்று காத்திருக்கிறோம்

இரக்கப் பார்வையும் கருணைப் பேச்சுகளும்
மட்டுமே இலவசமாகக் கிடைக்கும் உலகில்.
சமூகத்தின் சங்கிலித் தொடரில்
அறுந்து போன சரங்களாய்
விலாசங்கள் அற்றுப் போய் வாழும்
எங்கள் இல்லங்களுக்கு வந்துதான்
தங்களின் உள்ள விசாலத்தைப் பறைசாற்றிப்
பிறந்தநாள் கொண்டாடி
அவரவர் பிறப்பின் சுவடுகளை அழுந்தப்
பதிந்துவிட்டுச் செல்கின்றனர்.


நினைவுத் துளிகள்உனக்குள் மொட்டுவிட்ட காதல் மலர்
இதழ் விரித்து மணம் பரப்பியது 
உன் இதழ் உதிர்த்த வார்த்தைகளால்தான்
முதலில் சொன்னதென்னவோ நீதான்...
அது என்னுள் எங்கோ முடங்கிக் கிடந்த 

நேசநெருப்பை உரசிச் சென்றது....

சிப்பிக்குள் மழைத்துளியாக உன்
 நினைவுகளைப் பொதிந்திருந்தேன் மனதுக்குள்
காதல் முத்தொன்று அரும்பப்
போவதை அறியாமலேயே...