Thursday, November 10

குற்றப் பரம்பரை - வேலராமமூர்த்திகள்ளர் இன மக்களின் வாழ்வை, அவர்களின் சமுதாய நிலைப்பாட்டை, அவர்களுடன் வாழ்ந்த மற்ற சமூகத்தினர் என வெவ்வேறு தளங்களில் வாழும் மக்களின் வாழ்வியலை குற்றப்பரம்பரை என்னும் நாவல் மூலமாக பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி.
முதல் முறை வாசித்தபோது கதையும், உணர்வுகளும், விறுவிறுப்பான நடையுமாக ஒரே மூச்சில் வாசிக்க வைத்தது நாவல். மறுவாசிப்பில் எதார்த்த மொழி, சிக்கன வார்த்தைப் பிரயோகம், ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வியல் தர்க்கங்களை எழுத்தாளர் வெளிப்படுத்தி இருக்கும் விதம் ஆகியவை புரிபட்டன.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், தென் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்த கள்ளர்கள் சமூகம் மற்றும் அவர்களின் வாழ்வியல், சுக துக்கங்கள் என்று அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார். 
காட்டுப்பகுதியில் பதுங்கியிருக்கும் கள்ளர் கூட்டத்தைப் பிடிக்க முயலும் சர்காரிடம் இருந்து சில பல உயிர்களைப் பலிகொடுத்து தப்பி, கொம்பூதி என்னும் மலைக்கிராமத்தில் தங்கள் மறுவாழ்வைத் தொடங்குகிறார்கள் கள்ளர் இன மக்கள். தங்களுக்கு இணக்கமாக வாழும் பெரும்பச்சேரி கிராமத்திற்கு உதவி செய்யப் போய் பெருநாழி கிராமத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்கின்றனர். கள்ளர்களைக் கட்டுப்படுத்த போலீஸ் கச்சேரியை அணுகுகிறது பெருநாழி கிராமம். போலீஸ் கச்சேரியின் ஒரு அதிகாரியை விரட்டியும், அடுத்து வருபவரைக் கொன்றும் போலீஸின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறது கள்ளர் கூட்டம். இறுதியில் சிறு வயதில் காணாமல் போன கள்ளர் கூட்டத் தலைவர் வேயன்னாவின் மகன் சேது போலீசாக வந்து அவர்களைக் களவு செய்யவிடாமல் தடுக்கிறானா இல்லையா என்பதுதான் கதை.
     இடையிடையே வரும் வஜ்ராயினி, நாகமுனி, ஹசார் தினார், மான் என மையக் கதையிலிருந்து விலகும் கிளைக் கதை மாய எதார்த்த வகையைச் சார்ந்தது என்று சொல்லலாம். இரத்தமும் சதையுமான மையக் கதைக்குச் சற்றும் பொருந்தாமல் சிறுது தொய்வைக் கொடுப்பதாகவே எனக்குப் படுகிறது.
      களவின்போது நேரும் இழப்புகளும் வலிகளும் உயிர்ப்புடன் காட்டப்பட்டுள்ளது. ஒரு புறம், கரணம் தப்பினால் மரணம் என்று உயிரைப் பணயம் வைத்துக் களவுசெய்யும் பொருளை, அதன் மதிப்பு தெரியாமல் தானியத்துக்கு விற்று வாழும் சமூகம். இப்படியெல்லாம்கூட வாழ்ந்திருக்கிறார்களா என்று வியப்பும், இவ்வாறு வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான சமூக அவலங்களை நினைத்து வேதனையும் ஒரு சேர என்னை ஆக்கிரமித்தன.
தன்னை வல்லுறவு செய்யும் வெள்ளையனைத் தன் தலைமுடியாலேயே கழுத்தை இறுக்கிக் கொல்லும் இருளாயி, காவல் துறையினரின் வன்முறையை எதிர்க்கும் கூழானி கிழவி போன்று பெண்களைத் துணிச்சலானவர்களாகவும் சுதந்திரமாக இயங்குகிறவர்களாகவும் காட்டியுள்ளார்.  
வெறும் தகவல்களாக அல்லாமல் வாழ்க்கையை, மனித உணர்வுகளை, மண்ணின் தன்மையை, சில நிகழ்வுகளின் வழி நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தி வித்தியாசமானதொரு வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது ‘குற்றப்பரம்பரை’ நாவல்