Tuesday, November 1

இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி - சங்க இலக்கியம்

            மனப்பாடப் பகுதியில் மதிப்பெண்களுக்காக படித்தது மட்டுமே எனக்கும் சங்க இலக்கியத்திற்குமான உறவு. கொடுக்கப்பட்ட உரை விளக்கம் தாண்டி எதையும் சிந்திக்க விடாத தமிழ் ஆசிரியர்களின் மொழிப்பற்று ஒரு புறம் இருக்க, மற்ற பாடங்களில் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய காரணங்களால் தமிழ் என்றுமே மனப்பாடம் மட்டும்தான் என்றாகிப் போய் ரசனைக்கு அங்கே வேலையே இல்லாமல் போயிருந்தது. அவ்வப்போது சங்க இலக்கியம் என்ற வார்த்தை காதில் விழும் போதெல்லாம் படிக்க வேண்டும் என்று ஆசை தலை தூக்கும். ஆனால் மனப்பாடப்பகுதி தந்த மனக்கசப்பு திரை போட்டு அதை அடக்கிவிடும். ஆனால் ஆர்வம் மட்டும் விட்டபாடில்லை. சங்க இலக்கியம் வாசிக்கவில்லையே தவிர அதைப் பற்றிய வாசிப்பு அனுபவங்கள் எங்கே பார்த்தாலும் படித்துவிடும் ஆர்வம் இருந்தது. அவ்வாறு நிறைய கட்டுரைகள் படித்து மேலும் ஆர்வம் மேலிட குறுந்தொகை வாசிப்பில் நுழைந்தாகிவிட்டது. இத்தனை நாட்களாய் இவற்றையெல்லாம் வாசிக்காமல் விலக்கி இருக்கிறோமா என்று எண்ணி வெட்கும் அளவிற்கு குறுந்தொகையின் வீரியம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. 
             மனித உணர்வுகள் அனைத்தும் அகம் புறம் என்ற இரண்டிற்குள் அடங்கிவிடுகிறது. சங்க இலக்கியங்களில் காட்டப்பட்டிருப்பதும் அவ்வாறான ஒரு நிலைப்பாடுதான். சொல்லப்படாத விஷயங்கள் என்று எதுவுமே இவ்வுலகில் இருப்பதில்லை. மனித மனங்களின் ஆழமான உணர்வுகளை, உள்ளம் சார்ந்த காதல் வாழ்வை, அவர்களின் நிலம் சார்ந்த பின்னணியில், மொழி நுட்பம் கூட்டி, காட்சிகளின் வழி கட்டப்பட்டிருப்பது குறுந்தொகை.
              எப்போதும் காதல், தலைவி தலைவனைப் பிரிவது, தலைவன் பரத்தையிடம் செல்லுதல், பசலை நோய் இதே தானா? வாழ்வை வேறு கோணத்தில் எதார்த்தமாக அணுகத் தொடங்கி இருக்கும் இக்கால கட்டத்தில் இதை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்வது? என் பகுத்தறிவு விழித்துக்கொண்டு கேள்வி கேட்காமல் இல்லை. ஆனால் அதன் படிமங்கள் சூழ்ந்த மொழி வளமும், கண்முன் விரியத் தொடங்கிய காட்சிகளுமாக என்னை உள்ளுக்குள் எளிதாக ஈர்த்துக்கொண்டது. சங்க இலக்கிய வாசிப்பு என்பது சங்க காலத்தின் வாழ்வியல் முறைகளைப் பற்றி அறிந்துகொள்ள மட்டும்தானா? அனுபவங்கள் மாறலாம். உணர்வுகள் ஒன்றுதானே! உணர்வுகள் உள் நகர்ந்து நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்துவிடும்போது சங்கப்பாடல்கள் பல பரிமாணங்களைப் பெற்றுவிடுகின்றன.

நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

(குறுந்தொகை.6)
-பதுமனார்.

உலகமே உறங்கும் யாமத்தில் தலைவனைப் பிரிந்து உறக்கம் கொள்ளாமல் தவிக்கும் தலைவியின் மனப் புலம்பல்கள்.

‘சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள்’

சொற்கள் அற்ற தன்மையில் நிம்மதியான உறக்கம் எனக்கு மட்டும் இல்லாமல் போனதே என்ற ஏக்கம். காதல் பிரிவில் தன் இயல்பு தொலைத்தவளுக்கு, யாமத்தில் இயல்பாய் உறங்கும் மக்கள், விலங்கினத்தைக் குறிக்கும் ’மாக்கள்’ ஆகிவிடுகின்றனர்.
பதுமனார் நான்குவரிகளில் சொன்னதை, இரண்டே வரிகளில் திருவள்ளுவர் சொல்லிவிடுகிறார்.

காலைக்குச் செய்தநன்று என்கொல் எலன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை
---திருக்குறள் 1225


’ஊரு சனம் தூங்கிடுச்சு
ஊதக்காத்தும் அடிச்சிடுச்சு
பாவிமனம் தூங்கலியே
அதுவும் ஏனோ புரியலையே…’ ஜானகியின் குழைந்த குரலில் இந்தப் பாடல் சொல்வதும் காதலால் உறக்கம் தொலைத்தவளின் உணர்வுகளைத்தானே.

பிரிவையும் காத்திருப்பையும் பற்றிப் பேசும் இன்னுமொரு கவிதை:

நோம்என் நெஞ்சே நோம்என் நெஞ்சே
இமை தீய்ப்புஅன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல் நோம்என் நெஞ்சே.

(குறுந்தொகை.4)

-காமஞ்சேர் குளத்தார்.

’இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி’ எத்துணை ஆழமான கற்பனை! பொதுவாக நீர் என்பது தீயை அணைக்கும். இங்கே கண்ணீர் இமைகளைத் தீய்க்கிறதாம். பிரிவினால் ஏற்படும் கண்ணீர்த் துளிகள் இமைகளைத் தீய வைக்கும் அளவிற்கு வெப்பமாக இருக்கிறது என்று சொல்லும்போது பிரிவுத்துயர் தன்னை எந்த அளவுக்கு வாட்டுகிறது என்றே காதலி குறிப்பிடுகிறாள். ’நோம் என் நெஞ்சே!’ என்று மூன்று முறை கூறி தன் நெஞ்சம் படும் துயரின் மிகுதியை அழுத்தமாகப் பதிவிடுகிறாள்.
இந்தக் கவிதையில் என்னை மிகவும் கவர்ந்த வரி ‘அமைதற்கு அமைந்த நம் காதலர்’ என்பதுதான்.

என் கண்ணீரைத் துடைக்க வேண்டிய காதலன் என்பது ஒரு கருத்து. துயரைப் போக்க வேண்டியவனே அதற்கு காரணமாகும்போது அத்துயர் போக்க யார் உள்ளனர்?

’எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்’ என்பதுபோலவும் எடுத்துக்கொள்ளலாம்.

நான் இப்போது இப்படி இருக்கிறேன் என்றால் அதற்கு நீதான் காரணம் என்பது.

என்னுடைய காத்திருப்பிற்கும் தனிமைத் துயருக்கும் காரணமாக அமைந்தவன். இதுவும் பொருந்தும்.

எனக்கென்றே பிறந்தவன். என்னுடன் காதல் வாழ்வைப் பகிர்ந்துகொள்ளவே பிறந்தவன்.

நான் அமைவதற்கு, அதாவது நான் உயிரோடு இருப்பதற்கே அவன்தான் காரணம். அவன்மேல் உள்ள காதல்தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது.

இப்படிப் பல அர்த்தங்களை பெற்ற அந்த வரிகள் வாழ்வைப் பின்னோக்கிப் பறந்து சென்று அனுபவிக்கும் சிறகுகள் கொடுத்தது. காதல் வாழ்க்கையை அசை போடுவது காதலைப் பன்மடங்கு பெருக்கிவிடுகிறது. ‘அமைதற்கு அமைந்த நம் காதலர்’ என்று வாழ்க்கைத்துணையை அடையாளப்படுத்திக்கொண்டு காதலைப் புதுப்பித்துக்கொள்ளும் உணர்வைக் கொடுக்கும்.

கவிதை வாசித்தல் என்பது படித்து, உணர்ந்து அதில் ஒன்றுவது மட்டுமில்லை. அதன் பல்வேறு வகையான சாத்தியங்களைக் கண்டடையும் முயற்சி. அவ்வாறு முனையும்போது மொழியின் கனம் குறைந்து, கவிதைகளின் உயிர்ப்பை உணர்ந்து ஒரு புதிய தரிசனத்தில் மனம் திளைக்கச் செய்கிறது.