Tuesday, November 1

இந்த வயதில்…”இந்த வயசுல இப்படி நடந்துக்கறீங்களே, உங்களால சும்மா இருக்க முடியாதா?”
வெளியில் போய்விட்டு வீட்டுக்குள் நுழைந்ததும் குமாரின் கேள்விகளே கண்ணபிரானை வரவேற்றன. அவர் எதுவும் பேசவில்லை. தலை குனிந்தவாறே ஹாலைக் கடந்து செல்ல முயன்றார். சமையலறையில் இருந்து மருமகளின் குரல்,
“இப்படியே போனா என்ன அர்த்தம்? கொஞ்சமாவது பொறுப்பா நடந்துக்கறீங்களா? உங்களுக்கு என்ன குறை வச்சோம்? ஏன் இப்படி எங்க மானத்த வாங்கற மாதிரி நடந்துக்கறீங்க?”
அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. இன்றைக்கு நேற்று இல்லை, ஆறு மாதங்களாகவே இப்படித்தான் நடக்கிறது. அவர் சொன்ன பதில் எதுவும் அவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை போலும். கேள்விகள் துரத்திக் கொண்டே இருந்தன. இப்போதெல்லாம் பதில் சொல்வதையே நிறுத்தி விட்டார். அறைக்குள் சென்று கதவைச் சாத்தும்போது
”இதெல்லாம் சரிப்பட்டு வராது குமார், பேசாம முதியோர் இல்லம் எதிலயாவது சேர்த்திடலாம் “
என்று மருமகள் சொல்வது கேட்டது.     

சட்டையைக் கழற்றி மாட்டும்போது கண்ணாடியில் அவர் உருவத்தைப் பார்த்தார். சவரம் செய்யாத முகமும், கண்களைச் சுற்றிய கருவளையுமும், தளர்ந்து போன உடலும், ஆறுமாதத்தில் இரண்டு மடங்கு வயது கூடிவிட்டதைப் போல் தெரிந்தது அவருக்கு. மூக்குக்கண்ணாடியைக் கழற்றிவிட்டு தொப்பென்று கட்டிலில் உட்கார்ந்தார். கழுத்தில் மாலையோடு அவருடன் சிரித்துக் கொண்டு நிற்கும் மனைவியின் புகைப்படம் மேஜையில் இருந்தது. அதைப் பார்த்ததும், இவள் மட்டும் இருந்திருந்தால் கண்டிப்பாக இதெல்லாம் நடந்திருக்காது என்று வழக்கம் போல் நினைத்துக் கொண்டார். மனதுக்குள் அத்தனை விஷயங்கள் குழம்பிப் போய் வலம் வந்தன. ஒவ்வொன்றாக தனியே பிரித்து அலசி ஒரு முடிவுக்கு வரலாம் என்ற முனைப்புடன் சிந்திக்கத் தொடங்கினார்.

ஜானகியுடன் வாழ்ந்தது என்னவோ சில வருடங்கள்தான். அவள் இறந்தபோது குமார் பி.எஸ்.எல்.ஈ தேர்வுக்குத் தயாராகிக் கொண்டு இருந்தான். அப்போது தொடங்கியது ஓட்டம். வேறு எந்த சிந்தனைக்கும் இடமில்லாமல் வேலையிடம், வீடு, மகன் என்றே ஓடிக் கொண்டிருந்தார். பத்து வருடங்களுக்கு முன்பு ஹார்ட் அட்டாக் வந்ததும், ஒரே மகனான குமார் இனி அவர் வேலைக்குப் போகவேண்டாம் என்று கூற, கட்டாய ஓய்வுக்குத் தள்ளப்பட்டார். 58 வயதுவரை அவருடைய அனுபவங்கள் சொல்லித் தராததை, இந்தப் பத்து வருட ஓய்வு வாழ்க்கை கற்றுக் கொடுத்திருந்தது.

  ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. அப்போது ஜுராங் வட்டாரத்தில் இருந்தார்கள். அங்கே அவருக்கு நிறைய நண்பர்கள். காலையில் அவர்களுடன் நடைப்பயிற்சி, ஈரச்சந்தைக்குப் போய் வருவது, மதிய நேரங்களில் ‘சீனியர் சிட்டிசன் கார்னரில்’ சில சீன நண்பர்களோடு மாஜோங், சதுரங்கம் விளையாடுவது, மாலையில் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்குப் போவது என்று ஓய்வு பெற்றவர்களுக்கென்றே விதிக்கப்பட்ட பொழுதுபோக்குகளோடு நன்றாகத்தான் கழிந்தன நாட்கள். ஆனால் விரைவிலேயே அவருக்கு அலுத்துப் போய் விட்டது.

குமார் யிசூன் வட்டாரத்தில் வீடு வாங்கி குடியேறியதும்தான் அவருக்கு சிரமமாகி விட்டது. நண்பர்களும் குறைவு. காலையிலேயே மகன், மருமகள், பேரன் எல்லாரும் கிளம்பிவிடத் தனிமை அவரை ஆட்கொண்டது. மறுமகள் சமையல் முதற்கொண்டு எல்லாம் முடித்துவிட்டுக் கிளம்பி விடுவாள். சில நேரங்களில் துவைத்தத் துணிகளை உலர்த்துவது, சில பாத்திரங்களைக் கழுவுவது போன்ற வேலைகள் இருக்கும். அவ்வளவுதான். அதுவும் அவராகவே முன் வந்து செய்வது. இவ்வளவுநாள் உழைத்ததற்கு இப்போதைய ஓய்வு தகும் என்ற எண்ணமே வரவில்லை. ஏதோ ஒன்றுமே செய்யாமல் இருக்கிறோமே, மற்றவர்களுக்கு பாரமாகி விடுவோமோ என்ற எண்ணம்தான் வலுவடைந்தது. பொருளாதாரப் பிரச்சனையும் கிடையாது. அவருடைய சேமிப்பு போதுமான அளவிற்கும் மேலாகவே இருந்தது. ஆனாலும் தண்டச்சோறு சாப்பிடுகிறோமோ என்ற எண்ணத்தை மட்டும் அவரால் துரத்தவே முடியவில்லை. தொலைக்காட்சி பார்ப்பதிலோ, திரைப்படங்கள் பார்ப்பதிலோ விருப்பமும் இல்லை.  அடுத்தத் தெருவில் இருக்கும் நூலகம்தான் அவர் தஞ்சமடையும் இடம். வேலை மிகுதியில் விட்டுப் போன புத்தகம் வாசிக்கும் பழக்கத்தைப் புதுப்பித்துக் கொண்டார்.
   அப்படி ஒரு நாள் நூலகத்தில் ’கார்ல் மார்க்ஸ்’ புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்த போதுதான், திருமதி ஜெரிக்கா அறிமுகம் ஆனார். அதே புத்தகத்தைச் சொல்லி எங்கே இருக்கிறது என்று கேட்டபோது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. பக்கத்து வீட்டில் வசித்தாலும் அதிகமாகப் பேசியது இல்லை அவரிடம். சிலநாட்களில் மின்தூக்கியில் காலை வணக்கம், ஒரு சிறு புன்னகை, தீபாவளி வாழ்த்துகள், சீனப்புத்தாண்டு வாழ்த்துகள் பரிமாறிக் கொள்வதோடு சரி. இரண்டுபேரும் ஒரே புத்தகத்தைத் தேடுவது தெரிந்ததும் ஒருத்தர் படித்துவிட்டு மற்றவரிடம் கொடுத்துக் கொள்ளலாம் என்ற முடிவுடன் புத்தகம் இரவல் பெற்று அங்கிருந்து கிளம்பினர்.

‘எப்படி கார்ல் மார்க்ஸ் எல்லாம் படிக்கிறீர்கள்?’
அவர் கேட்டதும் ஒரு புன்சிரிப்புடன்
’ஏன் படிக்கக் கூடாதா? நான் முன்னாடியே படிச்சுட்டேன், இப்போ திரும்பவும் படிக்கத்தான் எடுத்தேன்’
பொதுவாகவே இது போன்ற புத்தகம் படிப்பவர்கள் மீது நல்ல மரியாதை அவருக்கு. ஜெரிக்கா ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் என்று தெரிந்ததும், இன்னும் அவர்மேல் மரியாதை கூடியது. ஆசியருக்கே உரிய கம்பீரமும் தெளிவும் இருந்தது அவரது பார்வையில். ஜெரிக்காவைப் பார்த்தது ‘நிமிர்ந்த நன்னடை நேர்க்கொண்ட பார்வை’ என்னும் பாரதியார் பாடல்தான் நினைவுக்கு வந்தது அவருக்கு. அவருடைய கணவர் இறந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மகனும் மகளுமாக இரண்டு பிள்ளைகள். மகள் ஆஸ்திரேலியாவில் குடியேற, இவர் மகனோடு சிங்கப்பூரிலேயே தங்கியிருக்கிறார். ’எனக்குப் புத்தகம்தான் தோழி. தனிமையை வெல்லும் ஆற்றல் அவற்றிற்கு மட்டும்தான் உண்டு.’ இது அடிக்கடி ஜெரிக்கா சொல்லும் வாக்கியம். புத்தகப் பரிமாற்றம் மற்றும் புத்தகத்தைப் பற்றி அலசுவதுமாக அவர்களுக்கிடையே ஒரு நல்ல நட்பை உருவாக்கியதில் புத்தகங்கள்தான் பெரும்பங்கு வகித்தன.

ஜெரிக்கா வீட்டில் வேலைக்கு ஆள் எடுத்திருப்பதால் அவருக்கும் வீட்டு வேலைகள் என்று எதுவும் இருப்பதில்லை. பேத்தி உயர்நிலைப்பள்ளி முடித்து வரும் நேரம், அவளுடன் பேசியபடியே சாப்பாடு எடுத்து வைத்து சாப்பிட வைப்பது மட்டும்தான் அவர் வேலை. சில நேரங்களில் பேத்திக்கு பிடிக்குமே என்று சில உணவுகளை சமைப்பதுண்டு. மற்ற நேரங்களில் அவருடைய பொழுதுபோக்கு புத்தகம் படிப்பது, இசையில் லயிப்பது. இப்போது நண்பர் கண்ணபிரானுடன் உரையாடுவதும் சேர்ந்து கொண்டது.

            காலையில் 7 மணிக்கு கிளம்பி பார்க்கில் நடைப்பயிற்சி முடித்துவிட்டு, இரண்டு பேரும் திரும்பும் நேரம் அநேகமாக இரண்டு பேர் வீட்டிலும் அனைவரும் கிளம்பியிருப்பார்கள். காலை உணவுக்குப் பின் கண்ணபிரான் எப்போதும் காரிடாரில் நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொண்டு புத்தகம் படிப்பார். அப்படிக் காற்றோட்டமான இடத்தில் அமர்ந்து படிப்பது அவருக்குப் பிடிக்கும். இப்போதெல்லாம் ஜெரிக்காவும் வந்து அமர்ந்து கொள்கிறார். படிப்பதையோ பாட்டு கேட்பதையோ வழக்கமாக்கிக் கொண்டார். அப்படியே பேச்சும் தொடரும்.

     தமிழ், சீன மொழிப் பரிமாற்றங்களும் அவர்களுக்குள் நடந்தன. செய்தித்தாள்களைப் படித்து அலசுவார்கள். இப்போதெல்லாம் செய்திகளில் நிறைந்து இருப்பது சிங்கப்பூர் பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும் எப்படியெல்லாம் நடைபெறுகின்றன என்பதை ஆர்வத்துடன் கவனித்தனர். இத்தனை வருட சிங்கை வாழ்க்கையில் அவர்கள் பெற்ற அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்து கொண்டார்கள். அவர்களுக்குப் பேசுவதற்கு நிறைய விஷயங்களும் பகிர்வதற்கு நிறைய அனுபவங்களும் இருந்தன. கேட்பதற்குத்தான் ஆளில்லாமல் இருந்தது. இப்போது அப்படி ஒரு நட்பு கிடைத்துவிட்ட மகிழ்ச்சி இரண்டுபேர் முகத்திலும் தெரிந்தது. உடல்நிலையைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதும், அதற்கு அவரவர்க்குத் தெரிந்த கைமருத்துவம் சொல்வதுமாக அவர்களிடையே நல்ல அக்கறையும் கூடியிருந்தது.
     இதில் யார் கண் பட்டதோ? என்றுதான் முதலில் நினைத்தார். அதெல்லாம் ஒன்றும் இல்லை. பார்வைகளின் தரத்தைப் பொறுத்துதான் காட்சிகள் அர்த்தம் பெறுவதாகவே கண்ணபிரானுக்குத் தோன்றியது. முதன் முதலில் இது பற்றிக் குமார் கேட்ட நாள் நினைவுக்கு வந்தது.

     தொலைக்காட்சியில் இருந்து கண்ணை எடுக்காமலே வார்த்தைகளை மட்டும் வீசினான்.
       “என்னப்பா புதுசா நண்பர்கள் எல்லாம் கிடைச்சிருக்காங்க போலிருக்கே”
அவனின் கிண்டல் புரியாமல் கண்ணபிரான் ஆர்வத்துடன் சொல்ல ஆரம்பித்தார்.
“நானே சொல்லனும்னு நினைச்சேன். நீ பிஸியா இருந்ததால் சொல்ல முடியல. நம்ம பக்கத்து வீட்டு ஆன்ட்டிதான் குமார். ரொம்ப நல்லவங்களா இருக்காங்க .பாவம் அவங்களுக்கும் வீட்டில் பேச்சுத் துணைக்கு ஆள் இல்லையா? அதான்..”
  ”அதனால நீங்க துணையா இருக்கீங்களா? இந்த வயதில் இதெல்லாம் தேவையா உங்களுக்கு?” அன்று ஆரம்பித்ததுதான் ’இந்த வயதில்’ புராணம்.
இந்தக் கேள்வியின் அர்த்தம் புரிந்து, சுதாரித்து அவர் பதில் சொல்லத் தொடங்கும் முன்பாகவே குமார் தொலைக்காட்சியை அணைத்துவிட்டு, அவனது அறைக்குள் சென்றிருந்தான். கண்ணபிரான் அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும் மகனுக்குப் புரிய வைப்பது தன் கடமை என்றே தோன்றியது.

     அடுத்த சில நாட்களில் இது பற்றிய பேச்சு வந்தபோது மருமகளும் கூட இருந்தாள்.
 “எங்க இரண்டு பேருக்குள்ள நல்ல நட்பும் அக்கறையும் இருக்கு குமார். வயசான காலத்தில மனசு விட்டுப் பேசறதுக்கு ஒரு நல்ல ஆத்மா கிடைச்சிருக்கு. அவ்வளவுதான்”.

“ஏன் நாங்க எல்லாம் இல்ல?”  

”இந்த வயதில் இதெல்லாம் தேவையா உங்களுக்கு?” இந்த முறை மருமகள்.

இதற்கு எப்படி பதில் சொல்வது என்று அவருக்குப் புரியவில்லை.

”ஊர்ல எல்லாரும் தப்பா பேசறாங்க, இனிமே இப்படி நடந்துக்காதீங்க” அத்தோடு அன்றைய பேச்சுக்கு மட்டும்தான் முற்றுப்புள்ளி வைக்க முடிந்தது குமாரால். அவர்களுடைய நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. இந்தப் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக ஊதி வெடிக்கத் தயாராகிவிட்ட நிலையில் இருக்கிறது. மருமகளின் பேச்சு அதை உறுதியும் செய்து விட்டது. அடுத்து என்ன? என்று யோசிப்பதுதான் மிகவும் கடினமான வேலையாக இருந்தது அவருக்கு.

இதைப் பற்றி ஜெரிக்காவிடம் பேச வேண்டும் என்று சில நாட்களாகவே நினைத்துக்கொண்டுதான் இருக்கிறார். போன மாதம் ஜெரிக்காவிற்கு கண் அறுவைசிகிச்சை நடந்து, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறார். இதெல்லாம் சொல்லி மனதையும் வருத்தப்படுத்த வேண்டாம் என்றுதான் தள்ளிப் போட்டார்.

இப்போது பேசியாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை உணர்ந்தார். இதைப் போய் எப்படி அவரிடம் சொல்வது? தன் மகனைத்தானே அவர் தப்பாக நினைப்பார் என்ற எண்ணமும் வரத்தான் செய்தது. இதுவரை குடும்ப நிலவரங்களைப் பற்றியோ, பிள்ளைகளைப் பற்றி குறை சொல்லியோ அவர்கள் பேசிக் கொண்டதேயில்லை. பேசினாலும் பேரன், பேத்திகளைப் பற்றிய பெருமையாகத்தான் இருக்கும். எப்படி ஆரம்பிக்கலாம் என்று பல ஒத்திகைகள் நடத்தியவாறே அந்த இரவைக் கழித்தார்.
     மறுநாள் காலையில், காரிடாரில் தொட்டி செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தார் ஜெரிக்கா. எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று கண்ணபிரான் யோசித்துக் கொண்டிருக்கும்போது
“உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணும். எப்படிச் சொல்றதுன்னுதான் தெரியல. கீழே கோப்பித்தியாம் போய் டீ சாப்பிடுவோமா?” ஜெரிக்கா கேட்டார். என்னவாக இருக்கும் என்று ஒருவாறு அவரால் ஊகிக்க முடிந்தது. இருவரும் கிளம்பிச் சென்றனர். காலை நேர பரபரப்போடு கடைகள் நிரம்பி வழிந்தன. ஆளுக்கு ஒரு தேநீரோடு ஒரு டேபிளில் உட்கார்ந்தனர். அந்தச் சத்தமான சூழலில் அவர்கள் இரண்டு பேர் மட்டும் பார்க்க அமைதியாகத் தெரிந்தனர். மனம் இடும் கூச்சலில் வெளியிடத்தின் ஆர்ப்பாட்டம் எதுவும் பெரிதாகப்படவில்லை இருவருக்கும்.

"ம். சொல்லுங்க.” என்றார் கண்ணபிரான்.
“கொஞ்ச நாளா வீட்டில ஒரே பிரச்சனை. எங்க வீட்டில் நான் உங்களோடு பேசுவதும் பழகுவதும் சுத்தமா பிடிக்கல. என் மகனும் என்னைக் கோபமா பேசிட்டான். எப்படி உங்கள்ட்ட சொல்றதுன்னுதான் இவ்ளோ நாளா யோசிச்சிட்டே இருந்தேன். வேலைக்காரிதான் ஏதோ சொல்லியிருக்கணும். என் பொண்ணுகிட்டயும் பேசிட்டாங்க. நான் சொல்லும் எதையும் புரிஞ்சுக்கற மாதிரி தெரியல. இப்போ எல்லாருமா சேர்ந்து என்னை முதியோர் இல்லத்தில் சேர்த்திடலாம்னு முடிவு பண்ணிட்டாங்க.” உறுதியாக ஆரம்பித்து தழுதழுத்தக் குரலுடன் முடித்தார். உடையத் தயாராக இருந்த கண்ணீரை விழுங்கும் அவர் கண்களை கண்ணபிரானால் கண்டு கொள்ள முடிந்தது. அங்கேயும் இதே போல் நடந்திருக்கும் என்று அவர் நினைத்துக்கூட பார்க்கவில்லை. தலை குனிந்தவாறே “எங்க வீட்டுலயும்தான்” என்றார். ஜெரிக்கா லேசாகத் தலையசைத்தபடி ”நினைத்தேன்” என்று மட்டும் சொன்னார்.

”ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. மற்றவர்கள் பேசுவதானாலா, இல்லை என் அம்மாவிற்கு என்னைவிட யாரோ ஒருத்தர் முக்கியமாகிவிட்டார் என்ற கோபமா தெரியல. என்னவா இருந்தாலும் அவங்க செய்றது தப்பு” ஜெரிக்கா அவருக்கே உரிய பாணியில் பொறுமையாகப் பேசினார். கண்ணபிரானுக்கு எல்லாவற்றையும் மீறிக் கோபம்தான் வந்தது.
“இந்த வயதில் நம்மை இப்படி பேசறாங்களே, இதைவிட அவமானம் என்ன இருக்குது?” என்று கொதித்தார். ஜெரிக்காவின் சமாதானங்களை ஏற்று, எப்படி இதற்கு ஒரு முடிவு கட்டுவது என்பது பற்றி மட்டும் இரண்டு பேரும் பேசிக் கொண்டனர்.

 மற்ற ஏற்பாடுகளை எல்லாம் செய்து விட்டு, பேப்பர் பேனாவுடன் சோபாவில் உட்கார்ந்து சிறுது நேரம் யோசனையில் ஆழ்ந்தார். மனதுக்குள்ளேயே மாற்றி மாற்றி எழுதி அழித்துக் கொண்டார். ஏதோ முடிவுக்கு வந்தவராய் எழுதத் தொடங்கினார்.


அன்புள்ள குமார்,
          நேரில் எதுவும் பேசும் அவகாசம் தரப்படாததால் கடிதத்தின் உதவியை நாடி இருக்கிறேன்.  எப்படி உனக்குப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என் மனதில் உள்ளதை உன்னிடம் கொட்டி விட்ட நிம்மதியாவது கிட்டும் என்பதும் ஒரு காரணம்.
நானும் ஜெரிக்காவும் பழகுவது கொள்வது உனக்குப் பிடிக்கவில்லை. அதற்கான உண்மையான காரணம் என்னவென்று என்னால் ஊகிக்க முடியவில்லை. உன் அம்மா இறந்தபோது, எனக்கு 38 வயது. அப்போது வராத ஆசையா இந்த 68 வயதில் வந்து விட்டது என்று நினைக்கிறாய்? ஊர் பேசுகிறது என்பது ஒரு காரணம்தான். உன் உள்மனமும் அதையே பேசத் தொடங்கிவிட்டதை, உன் வார்த்தைகளின் வீச்சில் அறிந்து நொறுங்கிப் போனேன்.
நீ பதின்ம வயதுகளில் பெண் தோழிகளுடன் பழகும்போதுகூட நான் உன்னிடம் எதுவும் சொன்னதில்லை. ஏன் தெரியுமா? உன்மேல் இருந்த ’நம்பிக்கை’. பிரச்சனைகளில் சிக்கி விடக்கூடாது என்ற அக்கறையில் சில அறிவுரைகள் கூறியதோடு நிறுத்திக் கொண்டேன். அந்த நம்பிக்கை உன்னிடம் இல்லாமல் போய்விட்டது என் துரதிர்ஷ்டம்தான். புரிந்துகொள்ளும் முயற்சிக்குக்கூட நீ வரவில்லை. மேற்கொண்டு நான் உன் நிம்மதியைக் குலைப்பதாகவும் நம்பத் தொடங்கி விட்டாய்.

என் உடல்நலப் பிரச்சனைகளைப் பற்றி வேண்டுமானால் உனக்கு  தெரிந்திருக்கலாம். ஆனால் மனம் ஏங்குவது எதற்கு என்று நீ புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. முதுமையில் தனிமை என்பது மகாக் கொடுமை. அதை அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும். அப்படி ஒரு வெறுமையில் உழன்றேன். உங்களையெல்லாம் நான் தவறாகச் சொல்லவில்லை. உங்களுடைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், எனக்காக நேரம் ஒதுக்குவது என்பது சிரமமாகி விடுகிறது. உன் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நீதான் என்னைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டாய். ‘இந்த வயதில் இதெல்லாம் தேவையா உங்களுக்கு?’ என்று எத்தனையோ முறை கேட்டிருக்கிறாய். இந்த வயதில், எங்களுக்குப் பேசுவதற்கும், உணர்வுகளைப் பகிர்வதற்கும் ஒரு நட்புணர்வுடன் கூடிய சகமனிதன்தான் தேவைப்படுகிறான். அது ஆண் என்றோ பெண் என்றோ பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை. இதுவே என் நட்பு ஒரு ஆணுடன் என்றால் நீயோ, நீ சொல்லும் இந்த ஊரோ எங்களை எதுவும் சொல்லியிருக்கப் போவதில்லை. எங்களுக்குத் தேவை அக்கறையுடன் கூடிய நட்பு. இதை அனுபவங்கள் உனக்குப் புரிய வைக்கும்.
உன்னை அதிகம் சிரமப்படுத்த விரும்பவில்லை.  இந்த வயதில் எனக்கான சில முடிவுகளை, எனக்காக மட்டுமே எடுப்பதில் தவறில்லை என்று தோன்றுகிறது. நானே முதியோர் இல்லத்தில் சேர்ந்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன். இதனால் நம் உறவில் விரிசல் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். ஒருத்தருக்கு ஒருத்தர் தொந்தரவாகப் போய்விட்ட நிலையில் ஏற்பட்ட சிறு விலகல். அவ்வளவுதான். நீயும் குடும்பத்தோடு எப்போது நினைத்தாலும் என்னைப் பார்க்க வரலாம். இந்த அப்பாவின் பாசக்கரங்கள் உங்களை அரவணைக்க என்றுமே ஏங்கிக்கொண்டுதான் இருக்கும்.

பாசத்துடன்,
அப்பா.

வார்த்தைகளில் அழுத்தம் தெரிந்தாலும், நடுநடுவே உணர்ச்சி வசப்பட்டு நனைந்த கண்களைத் துடைத்தவாறே எழுதி முடித்தார். மறுமுறை படித்துப் பார்க்கக் கூடப் பிடிக்கவில்லை அவருக்கு. அதை ஒரு கவரில் போட்டு ஒட்டினார். அந்தக் கடிதத்தைத் தபால்பெட்டியிலேயே போட்டுவிடுவது என்ற முடிவுடன் கிளம்பினார்.

கதவைப் பூட்டி விட்டுக் கிளம்பியபோது, பக்கத்து வீட்டு ஜன்னல் பக்கம் அவர் பார்வை தனிச்சையாக சென்றது. அங்கே ஜெரிக்கா தீவிர ஆலோசனையுடன் கையில் பேப்பரும் பேனாவுமாக உட்கார்ந்து இருப்பது கண்ணில் பட்டது. நடையின் வேகத்தைக் கூட்டினார். வெட்டுப்பட்டச் சிறகுகள் மீண்டும் கிடைத்து விட்டதைப் போன்று மனம் நிம்மதியும், தெளிவும் பெற்றிருப்பது அவரது நடையின் துள்ளலில் தெரிந்தது.