Thursday, November 10

புத்தனின் விரல் பற்றிய நகரம் - அய்யப்ப மாதவன்கவிஞர் அய்யப்ப மாதவனின் ’புத்தனின் விரல் பற்றிய நகரம்’ கவிதை நூல் சில நாட்களாக என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. கவிதைகள் மறுவாசிப்பு, மறுவாசிப்பு என என்னை உள்வாங்கிக்கொண்டிருக்கின்றன. மீள் வாசிப்பில் பல கவிதைகள் பரிமாண மாற்றங்கள் தந்து நல்ல வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றன. அந்தத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்…

கருங்கல் பழக்கங்கள்

கருங்கல்லில் ஒளிந்திருக்கும்
கடவுளை தரிசிக்க
மணிக்கணக்கில் தவம்
மனம் பதற நிமிட நேர தரிசனம் கவிதைகள்
கைகூப்பி வணங்கினால்
கடவுளின் கூலியாள் விரட்டுகிறான்
அருள் வாங்கிப்போகிறது முகம்
சாம்பல் பூக்கும் நெற்றியுடன்
கருங்கல் பழக்கங்கள்.

  கவிஞனாகிய அற்புதம்

மஞ்சளாக மாறுகிற நிலவின் அதிசயத்தில்
வண்ணங்களைக் குறித்து
இதயத்தைக் கிளறுகிற அந்தியில்
சாலையில் மஞ்சளுடுப்பில் மஞ்சள் பூச்சூடி
வடிவாகச் செல்லும் பெண்ணில்
நிலவை விரல் நீட்டி குழந்தமையை நினைவூட்;டும்
குழந்தையில்
பிரிந்த காதலியின் கண்ணீரில்
உதிர்த்துப்போட்ட இலைகளின் குவியலுக்குப்பின்
நிற்கும் மொட்டைமரத்தின் பேரிழப்பில்
குப்பைகளைக் கிளரும் பூனைகளின் பசியில்
கோடையைத் தாங்கும் இலையடர்ந்த
பச்சை இலைகளின் கவர்ச்சியில்
கண்களைக் குச்சியில் பொருத்தி நடந்துபோகும்
குருடனில்
அமைதியிலுறைந்த புல்லாங்குழல்களைக் கூவி
விற்பவனில்
கயிறில் நடக்கும் சிறுமியின் விழுந்துவிடும் அபாயத்தில்
வசந்தம் தொடர உலகே மலர்களாகிச் சிரிக்கும்
காலத்தில்
முகில்கள் கருத்துச் சொட்டும் திடீர் மழையில்
அடம்பிடிக்கும் அடைமழையில்
தெறித்து உடல் நனைக்கும் சாரலில்
குடை மறந்து கொட்டும் மழையில் நனைதலில்
புழுங்கும் போது மரமசைந்து வரும் தென்றலில்
மழைக்காலம் முடிந்து துவங்கும் பனியின் நடுக்கத்தில்
பகலை வரையும் பரிதியில் இரவைத் தீட்டும்
வான்சுடர்களில்
என் உயிரின் மர்மத்தில் இவ்வுலகில் தோன்றியதில்
சொற்களால் கவிஞனாகிவிட்ட அற்புதத்தில்
விடுபடமுடியாத பால்யத்தில்
பறந்த வண்ணத்துப்பூச்சிகளில் விட்டில்களில்
மீன்களில்
உலகைக் காட்டிய என அம்மாவில்
அன்பின் உருவமான தகப்பனில்
தம்பி தங்கை ரத்தத் துடிப்புகளில்
நட்பில் படர்ந்த உயிரில் ஒரு கவிதை விரிகிறது
அனுபவத்தில் ஒரு சொல் பல சொல்லாகி
வாழ்வாகி புனைவாகி எழுதி முடிக்கப்பட்டவை
சுவரில் மாட்டிய காணக் கிடைக்காச் சித்திரங்கள்.

       தனிமையும், நிராகரிப்பின் வலிகளும், புறக்கணிப்பின் துயரங்களும், ஆங்காங்கே இழையோடி இருக்கும் நகரத்தின் வெறுமையான தெருக்கள், கனவுகளைச் சுமந்து நிற்கும் வீடுகள், வான வெளியாகி நகரும் அறைகள், விற்கப்படும் பூட்டப்படாத கதவுகள், காட்சிகளைக் கையகப்படுத்தும் ஜன்னல்கள் என எனது விரல் பிடித்து அழைத்துச் செல்கிறது ’புத்தனின் விரல் பற்றிய நகரம்’.