Monday, November 14

எங் கதெ - இமையம்இமையத்தின் படைப்பில் நான் வாசிக்கும் முதல் படைப்பு என்பதால் சில எதிர்பார்ப்புகளுடனேயே வாசிக்கத் தொடங்கினேன். தலைப்பு எங்கதெ என்று இருப்பதால் கண்டிப்பாக பேச்சு வழக்கில் இருக்கும் ஒரு நாவல் என்பது கூடுதல் ஆர்வத்துடன் படிக்கத் தூண்டியது. 
விபத்தில் கணவனை இழந்தவள் கமலா. அரசின் அனுதாபத்தில் கணவனின் அரசாங்க வேலை அவளுக்கு கிடைக்கிறது. தன் இரட்டைப் பெண் குழந்தைகளோடு வேறொரு கிராமத்தின் அரசுப் பள்ளியில் வேலைக்குச் சேர்கிறாள். ஊரிலிருக்கும் ஆண்கள் வயது வித்தியாசம் இன்றி அவளின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபடும் வேளையில், அதே ஊரில் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கும் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்த இளைஞனுக்கும் அவளுக்கும் உறவு ஏற்படுகிறது. பள்ளி குமாஸ்தாவாக வேலை செய்யும் அவள், தன் மகள் பள்ளி வயதை எட்டும் வரையில் விநாயகத்தையே நம்பி இருக்கிறாள். பின்னர் கடலூரில் சி.இ.ஓ அலுவலகத்திற்கு மாற்றம் வரும் போது அவளது சூழலும் சார்புகளும் இயல்பாகவே மாறுகின்றன. கமலாவை மனைவியாக நினைத்து வாழும் விநாயகத்தின் வாழ்வில் மூன்றாமவன் நுழைகையில் அவனுடைய கோபம், குரோதத்தின் வெளிப்பாடு என்னவாக இருக்கும் என்பது "எங் கதெ" யின் முடிவு. இறுதியில் அவளைக் கொலை செய்கிற அளவிற்குச் சென்று பின் அதையும் தவிர்த்துவிட்டுச் செல்கிறான். அவர்களின் உறவினால் வரும் அக, புறச் சிக்கல்களையும், உளவியல் பிரச்சனைகளையும் உணர்வுகள் ததும்பும் எழுத்து நடையில் எளிதாகச் சொல்லிவிடுகிறார் எழுத்தாளர்.
நாவல் முழுதும் பேச்சு வழக்கில் இருப்பதால் இயல்பாகவே நம்மால் எளிதில் பொருந்திவிட முடிகிறது. கதையைச் சொல்கிற விநாயகம் சொல்வது போல, இது அவனுடைய கதை மட்டுமல்ல, கமலாவின் கதையும்தான். கதை முழுதும் கமலாவின் பெயர் நிறைந்திருக்க, கதை சொல்லியின் பெயர் நாவலில் ஒரே ஒரு முறைதான் சொல்லப்பட்டிருக்கிறது. காரணம், விநாயகத்தின் புலம்பல்களாக மட்டுமே கதை நீள்கிறது. 

"நல்ல பாம்பு வர்ற மாரி சரசரன்னு வந்தா. ’ என்று கமலாவை அறுமுகப்படுத்துவதில் தொடங்கி,

”கண்ணீருல பொம்பள கண்ணீரு, ஆம்பள கண்ணீருன்னு இருக்கா? வலியில பொம்பள வலி ஆம்பளவலின்னும் 
இருக்கா? ஆனா ஒலகம் அப்படித்தான் சொல்லுது. தனக்கு வந்தா சோகம்.கவல. 
துயரம். அதே மத்தவங்களுக்கு வந்தா வெறும் சும்மா. காத்துப்போல.” என்று கழிவிரக்கத்தில் துவண்டு,
‘நான் இறங்கிய ஆற்றுக்கு மறு கரையில்லை” “கிணத்துல குதிச்சா தப்பிக்கலாம், கடல்ல குதிச்சா தப்பிக்க முடியுமா“ என்று விரக்தியில் தற்கொலை செய்துகொள்ளலாமா, கொலை செய்யலாமா  என சிந்திப்பது வரை விநாயகத்தின் வாழ்க்கை மாற்றங்கள் காட்டப்படிருக்கிறது.

ஆண் மனதின் ஆழ்ந்த வடு தன்னிரக்கத்தின் உச்சத்தில் கொலை செய்யும் அளவிற்குப் போகும் விநாயகம் சட்டென்று மனம் மாறிவிடுகிறான். அதுவரை பெண் உடலைப் பற்றி அவன் கொண்டிருந்த அத்தனை பிம்பங்களும் மறைந்து வேறு கோணத்தில் சிந்திக்கத் தொடங்குகிறான். 

தன் குடும்பம், நண்பர்கள், ஊர், உறவு எல்லாம் மறந்து கமலாவின் பின்னால் சுற்றும் விநாயகம் அவளிடம் அவமானப்பட்டுத் திரும்பும் ஒரு நாளில் எப்படி குடும்பத்துடன் அந்நியப்பட்டிருக்கிறோம் என்பதை உணரும் காட்சிகள் மிகவும் இயல்பு. கமலாவை விநாயகத்தின் குடும்பம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக ஏற்றுக்கொள்வது போன்ற காட்சிகளும் உண்டு. அதன் பாதிப்பில் இருந்து அவனை வெளிக்கொணரும் வழி தெரியாமல் திண்டாடும் குடும்ப உறுப்பினர்களின் மன உணர்வுகளும் அழகாகக் காட்டப்பட்டிருக்கிறது. வலி, கழிவிரக்கம், வெறுப்பு, குரோதம் என அன்பின் பல பரிமாணங்களை மிக நுணுக்கமாக இந்நாவல் பேசுகிறது. 

பல காட்சிகள் மறுபடியும் மறுபடியும் சொல்லப்பட்டிருப்பதைத் தவிர்த்திருக்கலாம். ஆனால் கதைக்குத் தொய்வு வராத எழுத்து நடை அவற்றைக் கடந்துவிட உதவுகிறது. பேச்சு வழக்கில் சொல்லப்படும் இந்தக் கதையில் சொலவடைகளும், பழமொழிகளும் அழகாகப் பொருந்தியிருக்கின்றன.

விநாயகத்துடன் சேர்ந்து வாழ்ந்த போதிலும் அவனிடம் என்றும் ஒரு விறைப்பையும் பொருட்படுத்தா தன்மையையும் காட்டியபடியே வாழும் கமலா. பெற்றோர், மாமனார் சொத்துகளை நிர்வகிக்கும் அவள் யாரையும் சாராமல் வாழுகிறாள். ஆனால் அவள் மீது சபலம் கொண்டு நெருக்கடி கொடுக்கும் வயதான சி.இ.ஒவை ஒரு கட்டத்தில் ஏற்கிறாள். எந்த பொருளாதார நெருக்கடியும் இல்லை என்னும்போது, வேலையை விட்டாலும் அவளால் வசதியாய் வாழ முடியும் என்ற நிலையில் அவள் ஏன் இந்த முடிவுக்கு வந்தாள் என்பதற்குச் சரியான காரணங்கள் எதுவும் நாவலில் சொல்லப்படவில்லை. சுயமரியாதையுடன் வாழும் ஒரு நவீனப் பெண்ணாகக் காட்டப்பட்டிருக்கும் கமலா எடுக்கும் சில முடிவுகள் புதிராகவே இருக்கின்றன. ஒரு கட்டத்தில் சமூகம் அவளுக்குக் கொடுக்கும் அவப்பெயரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதைப் போன்ற ஒரு பிம்பத்தை நாவல் கொடுக்கிறது. அதில் ஒருவித மன அமைதியும் அடைவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவே தோன்றுகிறது. அது மிகவும் நெருடலான விஷயமாகப் படுகிறது. சிறிது தவறினாலும் கதை வேறு கண்ணோட்டம் பெற்றுவிடக்கூடிய நிலையில், ஆசிரியர் அதைக் கையாண்ட விதம் குறிப்பிடத்தக்கது.

கமலாவின் பார்வையில் இந்தக் கதை சொல்லப்படவில்லை என்றாலும்  நாவல் வாசிப்பில் கமலாவைச் சுற்றியே  மனம் அலைந்து கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. விநாயகத்தின் மனவோட்டங்களைத் தெளிவாகச் சுட்டியிருக்கும் ஒவ்வொரு காட்சியிலும், கமலாவின் தரப்பில் இருந்து ஊகிக்கும் முயற்சியாகத்தான் என் வாசிப்பு அனுபவம் அமைந்தது. மேலோட்டமாகப் பார்க்கையில் ஓர் ஆண் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக இருந்தாலும், சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத உறவினால் ஒரு பெண் எதிர்கொள்ளும் வாழ்வியல் நெருக்கடிகளையும், நுண்ணிய மன உணர்வுகளையும் மிகவும் அழுத்தமாகவும் இயல்பாகவும் பதிவு செய்திருக்கிறது ‘எங்கதெ’ நாவல்.