Tuesday, November 1

அவர் அப்படித்தான்அலுவலக இருக்கையில் அமர்ந்ததும் பின்னுக்குச் சாய்ந்து கண்களை மூடினேன். அத்தனை கவலைகளையும் துடைத்துவிடும் முயற்சியாய் பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. மிகவும் அயற்சியாக இருந்தது. இந்தச் சண்டை எப்படி ஆரம்பித்தது என்றே தெரியவில்லை. எங்கெங்கோ சென்று எதிலோ வந்து முடிந்திருக்கிறது. எதற்கு, ஏன் என்பதெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, வீசப்பட்ட வார்த்தைகள் அனைத்தும் அவரவர்களுக்குத் தேவையான அர்த்தங்கள் பெற்று பூதாகரமாகி மனதை ஆக்கிரத்துவிடுகின்றன. கணினியை உயிர்ப்பித்தேன். வேலைகள் வரிசை கட்டிக்கொண்டு நின்றன. சே! என்ற ஒரு தலையசைப்பில் மனத்தின் கூச்சல் அனைத்தையும் உதறிவிட்டதாய் நினைத்துக்கொண்டு வேலையில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.

     சில்லரைச் சண்டைகள் எப்போதும் நடப்பதுதான் எங்களுக்குள். ஆனால் அதற்குப் பிறகான தாக்கம் இப்போதெல்லாம் அதிகரித்து விட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. யார் முதலில் பேசுவது என்பதில் தொடங்கி, ஈகோ தலைதூக்க சமாதானத்திற்கான காலமும் நீண்டு கொண்டே போகிறது. அலுவலகம் வந்ததில் இருந்து பத்தாவது முறையாக அலைபேசியை எடுத்துப் பார்த்தேன். அவரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்திகூட இல்லை. ஏமாற்றம் என்று சொல்ல முடியாது. இதெல்லாம் சண்டை நாளின் சகஜமாகிப் போயிற்று. ஆனாலும் எதிர்பார்ப்பதை மட்டும் ஏனோ என்னால் நிறுத்த முடியவில்லை. ஏன் நீ கூப்பிட்டுப் பேசினால் என்ன? என்று கேள்வியெழுப்பிய மனசாட்சியைத் தலையில் தட்டி அடக்கினேன்.
அவருக்கு இது போன்ற எண்ணங்களோ அலசலோ இருப்பதற்கான சுவடுகள் எதுவும் தென்படவில்லை. அவர் எப்போதும் இப்படித்தான். சின்னச் சின்ன மனஸ்தாபங்களுக்குக்கூட முகத்தை உர்ரென்று வைத்துக்கொள்வார். நான் ஒருத்தி வீட்டில் இல்லவே இல்லை என்பதுபோல் நடந்துகொள்வார். ஒரு வாரம் ஆனாலும் பேசாமல் இருக்க முடியும் அவரால். அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல் நான்தான் வலியச் சென்று பேசத் தொடங்குவேன். அதற்கென்றே காத்திருந்தவரைப் போல் பேசிவிடுவார். அப்படியே சகஜ நிலைக்குத் திரும்புவோம். ஆனால் அன்றைய நாளின் சண்டைக்கான காரண காரணிகளை ஆராய்ந்து இனி நடக்காமல் இருக்க ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டும் என்ற என் எண்ணம் மட்டும் ஈடேறியதே இல்லை. இந்த முறையும் அதுவே தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை.
     அலுவலகத்தில் ஒவ்வொருவராக எழுந்து போவதைக் கண்டதும்தான் மணியைப் பார்த்தேன். மதியம் ஒன்று. செல்வி இன்று அலுவலகத்திற்கு வரவில்லை. அவள் வந்திருந்தால் இந்நேரம் என் முகத்தை வைத்தே என் மன உளைச்சலைக் கண்டுபிடித்து ஆசுவாசப்படுத்தி இருப்பாள். அவளைப் பொறுத்தவரை சின்னச் சின்ன சண்டைகள் ஒருத்தரை ஒருத்தர் புரிந்து கொள்ள உதவும். தாம்பத்திய வாழ்க்கையைப் பலப்படுத்தும். அவள் அப்படித்தான் பேசுவாள் ஏனென்றால் அவளுடைய கணவர்தான் விட்டுக் கொடுத்துப் போவார். ஆனால் என் கதை அப்படி இல்லையே.
 “யார் விட்டுக் கொடுத்தால் என்ன? ஒருத்தர் இல்லைனா இன்னொருத்தர் விட்டுக் கொடுக்கப் போறோம். அவ்வளவுதானே? நீ பேசியும் பேசாம இருக்காரா? அப்படினாதான் நீ கவலைப்படணும். ஒவ்வொரு வீட்டிலும் என்னெல்லாம் கொடுமை நடக்குது தெரியுமா?” என்பாள்.  கெட்டப் பழக்கங்களில் தானும் அழிந்து குடும்ப நிம்மதியையும் குலைக்கும் ஆண்களைப் பற்றிக் கூறுவாள். எல்லாம் சரிதான். அவர் நல்லவர்தான். அத்தனையிலும் சமத்துவம் பேசுவார். நண்பர்கள் போல்தான் நானும் என் கணவரும் இருப்போம். ஆனால் ஏதேனும் மனஸ்தாபம் என்று வந்துவிட்டால் அதெல்லாம் காணாமல் போய்விடும். செல்வி இன்று அலுவலகத்திற்கு வராததும் நல்லதுக்குத்தான். தனியாகப் பிரச்சனைகளை அலசி ஒரு முடிவுக்கு வரலாம்.
     காண்டீனுக்கு நடந்தேன். அலைபேசியின் அழைப்பு ஒரு சில நொடி எதிர்பார்ப்பைக் கிளறி விட்டது. அம்மா! சிறு ஏமாற்றத்துடன் பேசத் தொடங்கினேன். எப்போதும் போல் ‘சாப்பிட்டாயா?’ என்று ஆரம்பித்து இன்று மாலை யிசூன் கோவிலுக்கு வருவதாகவும் அப்படியே எங்கள் வீட்டிற்கும் வருவதாக இருப்பதுமான தகவலுடன் முடித்தார். சண்டையின் பின் விளைவுத் தாக்கம் என் அம்மா வரை நீள்வதில் எனக்குத் துளியும் உடன்பாடில்லை. அம்மாவிடம் நடந்ததைச் சொல்லும்படி ஆயிற்று. என் பக்கத்து நியாயங்களையும் மனக் கவலைகளையும் கொட்டிவிடத் துடிக்கும் மனத்தை அடக்கிச் சுருக்கமாகச் சொல்லி முடிப்பதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது. ஏதேனும் அறிவுரைகளை எதிர்பாத்த எனக்கு, மறுமுனையில் அம்மாவின் சிறு சிரிப்புதான் கிடைத்தது. என்ன ஏது என்ற மேல் விசாரிப்புகள் எதுவும் இன்றி
“சரி சரி. நீ பார்த்துக்கோ. வீக் எண்ட் முடிஞ்சா வீட்டுக்கு வாங்க”
என்றபடி தொலைபேசியை அணைத்தார். வார இறுதி வரைதான் உங்களுக்கு அவகாசம். அதற்குள் சரி செய்து கொள்ளுங்கள் என்று சொல்வது போல் இருந்தது. இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று எண்ணத் தொடங்கினேன். இன்று வெள்ளிக்கிழமை என்பதும் நினைவுக்கு வந்தது.
 அம்மா எப்போதுமே இப்படித்தான். அவளால் எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ள முடிகிறது. எங்கள் திருமணத்திற்குப் பிறகு, முதல் முறை அவர் கோபப்பட்டுப் பேசாமல் இருந்த போது திகைத்துப் போய் நின்றேன். எப்படி நடந்து கொள்வது என்றே புரியவில்லை. அம்மா என்ன செய்வார்கள் என்றுதான் நினைவு படுத்திப் பார்த்தேன். அவர்களுக்கு இடையேயான வாக்குவாதங்கள் எங்களை வந்து தாக்காமல் பார்த்துக் கொள்வதில் அம்மா பெரும் பங்கு வகித்ததாகவே தெரிகிறது. அப்பாவின் சத்தம் கேட்ட அளவிற்கு அம்மாவின் குரல் ஓங்கி ஒலித்ததில்லை. ஆனால் அழுத்தமான ஓரிரண்டு வார்த்தைகளில் வேண்டியதைச் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவாள். கல்யாணமாகி ஒரு வருடம் முடிந்தும் இன்னும் அந்தக் கலை எனக்குக் கைவரவில்லை. சட்டென்று கோபமும், அதற்கும் முன்பாக அழுகையும், அதையும் முந்திக் கொண்டு வார்த்தைகளும் என் அனுமதிக்கெல்லாம் காத்திருக்காமல் தெறிக்கத் தொடங்கி விடுகின்றன. முடிவில் சொல்ல நினைத்ததைத் தவிர மற்றவை எல்லாம் சொல்லி இருப்பேன். அவர் அதைப் பிடித்துக் கொண்டு தொடங்கி விடுவார். நான் பேசியது எல்லாம் எனக்கு மறந்து போய் விடும். அவரின் வார்த்தைகள் அப்படியே மனத்தில் ஒட்டிக் கொண்டு அரிக்கத் தொடங்கி விடும். இதுதான் வழக்கம் என்றாகிவிட்டது.
இன்றோடு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இப்போது நாங்கள் இரண்டு பேர் மட்டும் என்பதால் பரவாயில்லை. குழந்தைகள் பிறந்து, அடுத்த கட்ட வாழ்க்கையில் இது வேறு மாதிரியான பாதிப்புகளை உண்டாக்கலாம். அவர் இதைப் பற்றி எல்லாம் யோசிக்கப் போவதில்லை. நான்தான் கொஞ்சம் மாற்றிக் கொள்ள வேண்டும். வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கொடி தூக்கக் கூடாது. இதையெல்லாம் யோசிக்கிறேனே தவிர, எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறேன் என்று தெரியவில்லை.
அலுவலகத்தில் இருந்து கிளம்பினேன். இன்றில் இருந்தே தொடங்கிவிட வேண்டும். ஆனால் அதற்கு முன்பாக அவரிடம் இதைப் பற்றிப் பேசிப் புரிய வைக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் சண்டை போட்டுச் சமாதானம் ஆவதைவிடப் பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்று எடுத்துச் சொல்ல வேண்டும். இன்று வீடு போனவுடன் அவர் கோபத்தில் உணர்வுகளைக் கொட்டினாலும் பொறுமையாகக் கேட்டுப் பின் அமைதியாகப் பேச வேண்டும். நீண்ட நமது வாழ்க்கைப் பயணத்தில் சிறு சிறு சண்டைகள் வேகத்தடைகளாக மட்டுமே இருக்கட்டும். இடையூறாக மாறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்த வேண்டும். எப்படியும் இன்று அவரிடம் மனம் விட்டுப் பேச வேண்டும்.
இப்படிப் பல எண்ண ஓட்டங்களுடன் எப்போது எம். ஆர். டி ஏறினேன், வீடு வந்து சேர்ந்தேன் என்பதே தெரியவில்லை. எல்லாம் தனிச்சையாகவே நடந்திருக்கிறது. அவர் முன்பே வந்திருப்பதைத் தொலைக்காட்சி சத்தம் அறிவித்தது. என்னிடம் உள்ள சாவியைக் கொண்டு கதவைத் திறந்தேன். கையில் காபியுடன் உட்கார்ந்து இருந்தார். தொலைக்காட்சியில் இருந்து தலையைத் திருப்பி என்னைப் பார்த்து விட்டுத் திரும்பினார். நானும் குளித்துவிட்டு வந்து பிறகு பேசலாம் என்ற முடிவோடு ஹாலைக் கடந்து சென்றேன்.

“ஏன் வாட்டமா இருக்க? வேலை அதிகமோ? சூடா காபி கலக்கட்டுமா?”
என்னை நிறுத்தியது அவருடைய வார்த்தைகள். கேள்விகளை அடுக்கியபடியே என் பதிலுக்குக் காத்திராமல் எழுந்து சமையலறைக்குள் நுழைந்தார். மெளன யுத்தத்தையோ வார்த்தை அம்புகளையோ எதிர்கொள்ளத் தயாராகி வந்த எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கைப்பையை அங்கேயே போட்டு விட்டு அப்படியே உட்கார்ந்தேன். அவ்வளவு எளிதில் மாறக் கூடியவர் இல்லையே. கையில் காபியிடன் வரும் அவரையே உற்றுப் பார்த்தேன். காலைச் சண்டையின் பிரதிபலிப்பு எதுவும் இன்றி தெளிவாகத் தெரிந்தார். எனக்கும் நிம்மதியாகவே இருந்தது. அவசரப்பட்டு அம்மாவிடம் இதைப் பற்றிப் பேசியிருக்க வேண்டாமோ என்றுகூடத் தோன்றியது. அவரை சகஜத்திற்கு கொண்டு வரும் ஒரு பெரிய வேலை இன்று இல்லாமல் போய் விட்டது. இதுதான் நல்ல சமயம். பேசி விட வேண்டும். சண்டையின் ஆணிவேரைக் களைந்து விடும் அவசியத்தை உணர்த்தி விட வேண்டும். திரும்பவும் சண்டையில் போய் முடியாமல் எப்படி நான் நினைப்பதை எல்லாம் சொல்வது என்று யோசித்துக் கொண்டே காபியை உறிஞ்சினேன். தொலைக்காட்சியை அணைத்துவிட்டு ஏதோ பேசுவதற்கான தோரணையில் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்தார்.
“இன்னைக்கு காலைல…”
என்று நான் தொடங்கியதைக் கவனிக்காதது போல
“டின்னருக்கு வெளியே போகலாமா?”
என்று கேட்டுவிட்டு என்னையே பார்த்துக் கொண்டு இருந்தார் பதிலுக்காக. அவரின் கெஞ்சலான முகம் பார்த்ததும் மற்றவை மறக்கத் தொடங்கின. இன்றேதான் பேச வேண்டுமா என்ன? இப்போது தொடங்கி மறுபடியும் சண்டையில் போய் முடிந்து விட்டால்? நாளை பேசிக் கொள்ளலாம். பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்ற எண்ணத்தையும், சேகரித்த அத்தனை வார்த்தைகளையும் சிரமப்பட்டு விழுங்கினேன்.
“எங்கே போகலாம்?”
என்றபடி எழுந்து வெளியே கிளம்பத் தயாரானேன் இந்த நேரத்தின் சந்தோசத்தை இழப்பதற்கு மனமில்லாமல்.