Tuesday, January 10

பாக்ஸ் - ஷோபா சக்தி

  

ஷோபா சக்தியின் பாக்ஸ் புதினம் படிக்கச் சொல்லி நண்பர் பரிந்துரைத்தவுடன் நூலகத்திற்குப் போய்த் தேடினேன். அவருடைய கொரில்லா புதினம்தான் கிடைத்தது. பாக்ஸ் கைக்கு வருவதற்குள் கொரில்லாவை முடித்துவிடலாம் என்ற ஆர்வத்துடன் வாசிக்கத் தொடங்கினேன். பத்து பக்கங்களுக்கு மேல் வாசிக்க முடியவில்லை. கதைக்குள் நுழையவே முடியவில்லை. நடை, மொழி, களம், நாவல் கதையாக்கம் எல்லாமே புதிதாக இருந்தது. சரி, இது நமக்கான படைப்பு இல்லை போலும் என்று விட்டுவிட்டேன்.
 பாக்ஸ் கிடைத்ததும் கொரில்லா வாசிப்பு அனுபவம் தந்த திகிலுடன்தான் வாசிக்கத் தொடங்கினேன். முதல் காட்சியிலேயே அமையாள் கிழவியின் நிர்வாணமான உடல் குளத்தில் மிதந்து கொண்டிருந்தது. தொடர்ந்து வாசிக்கத்தான் வேண்டுமா என்ற சிந்தனையிலேயே அடுத்தடுத்த வரிகளுக்குத் தாவினேன். குளத்தில் மிதந்த அமையாள் கிழவின் உடலை நிலவு மேகத்திலிருந்து வெளிவந்து பார்க்கிறது. பிறகு மெல்ல வன்னி நிலத்தில் அதே நேரம் நிகழ்ந்துகொண்டிருக்கும் அனைத்தையும் தொட்டுச்செல்கிறது. நிலவின் பார்வையில் கதை நகர்வது சுவாரசியத்தைத் தந்தது. நிலவுடன் தொடர்ந்து பயணிப்பது என்ற முடிவுக்கு வந்தேன். பெரிய பள்ளன் குளத்தில் சிறுவன் கார்த்திகையின் கை பிடித்துக் கொடுத்துவிட்டுச் சென்றது அந்நிலவு.  
நாலாதிசைகளிலும் முற்றுகையிட்டு அழிக்கும் எதிரியின் உத்தியான பாக்ஸ்தான் மைய இழை. வன்னியில் உள்ள ’பெரிய பள்ளன் குளம்” என்ற கிராமத்துக்கு ஒரு சிறுவன் வந்து சேருகிறான். கார்த்திகை என்று அங்குள்ள மக்களால் அழைக்கப்பட்டு, அவர்களின் செல்லப்பிள்ளையாக பெரிய பள்ளன் குளத்து அணைக்கட்டில் இருந்த ஆதாம் சுவாமியின் கல்லறை வீட்டில் வாழ்ந்து வருகிறான். அவன் வாய் பேச முடியாத ஊமை என்பதுவே அம்மக்கள் அவனை அரவணைக்கக் காரணமாக இருந்தது.  இராணுவ முகாம் அமைப்பதற்காக பெரிய பள்ளன் குளம் கிராமத்தை ஆக்கிரமிக்கப்பட்டு அங்கிருந்து மக்கள் வெளியேறுமாறு அறிவிக்கப்படுகின்றது. அமையாள் கிழவியையும் கார்த்திகையையும் தவிர அனைவரும் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இராணுவம் இறுதியாக ஆதாம் சுவாமி கல்லறை வீட்டை பெட்டியடித்து சுற்றி வளைத்த பொழுது, கார்த்திகை அந்த ராணுவத்துடன் சிங்களத்தில் உரையாட ஆரம்பித்து தனது பூர்வீகத்தைச் சொல்கிறான். “ஸ்வஸ்திக பண்டார தென்னக்கோன்” என்ற பெரும் செல்வந்தரின் ஒரேயொரு மகனாகப் பிறக்கும் சந்த, அங்கிருக்கும் புத்த விகாரைக்குத் துறவியாக வருவதற்குப் பெற்றோரால் நேர்ந்து விடப்படுகின்றான். சந்தவுக்கு மடாலயத்தின் கட்டுப்பாடுகள் பிடிக்காமல் அங்கிருந்து தப்பி கால் போன போக்கில் சென்று வன்னியில் உள்ள ”பெரிய பள்ளன் குளம்” என்ற கிராமத்துக்கு வந்திருக்கிறான். இறுதியில் தன் பெளத்த மதத் துறவு ஆடையை அமையாள் கிழவியின்மேல் போர்த்துகிறான்.
முதல் காட்சியில் பாக்ஸூக்குள் நிர்வாணமாக நிற்க வைக்கப்பட்டிருக்கும் இரு ஆடவர்களுடன் தொடங்கி, சந்த ஸ்வஸ்திக தேரர் திரைமறைவுப் பெட்டிக்குள் முழு நிர்வாணமாக நடந்துபோவது வரை நாவல் முழுதும் பாக்ஸ் ஒரு படிமமாகவே வருகிறது. பின்இணைப்பு ஒன்றுடன் பாக்ஸ் நிறைவடைகின்றது. இலங்கையில் மிகப் பெரிய நிழல் தொழிலாக மாறியிருக்கும் பாலியல் விடுதிகள் பற்றி இறுதிப்பகுதியான “முற்றுப்பகுதி’யில் எழுதி இருக்கிறார். அது நாவலுடன் ஒட்டாமல் துருத்திக் கொண்டு தனித்து நிற்பதாகவே தோன்றுகிறது. புதிதாக வந்து சேரும் சிறுவனை அமையாள் கிழவி அரவணைப்பது, பெரிய பள்ளன் குளம் கிராம மக்கள் அவனுக்குப் போர்முனைக் காட்சிகளையும், யுத்தத்தின் வலியையும் நாடக அரங்க முறையில் நடித்துக் காட்டுவது, ’கோமத’ என்ற சிங்கள வார்த்தையைச் சொல்வதைக் கண்டு தன் வளர்ப்புக் கிளியினை அமையாள் கிழவி கொன்றுவிடுவது என ஒவ்வொன்றாகக் குறிப்புகள் கொடுக்கப்பட்டு இறுதியில் அத்தனையும் மைய இழையுடன் கோர்க்கப்படுகிறது. இதய ராணி, அமையாள் கிழவி, கார்த்திகைத்தம்பி, டைடஸ் லெமுவேல், சகோதரம், நாச்சியார், பிரணவன், மயூரன், சைனீஸ் திலகர், அமிர்த கலா என்று அனைவரின் வாழ்க்கைக் கதைகள், ஆங்காங்கே சிலரின் உரைமொழிப்பதிவுகளும், உபபிரதிகளுமாக கதை நகர்கிறது.
கதையோட்டம் ஒன்றோடொன்று தொடர்பில்லாமல், முன்னும் பின்னும் நகர்ந்தவாறு இருந்தாலும், சிறு சிறு கதைகளை பாக்ஸ் என்னும் நூலிழையால் பிரதான கதையோடு மிகவும் லாவகமாகப் பின்னிப் பிணைத்திருக்கிறார் எழுத்தாளர் ஷோபா சக்தி. ஆயினும் சில உபகதைகள் அயர்ச்சியுறச் செய்தன. அமையாள் கிழவியின் இறுதி யாத்திரையில் ‘சந்த ஸ்வஸ்திக தேரர்’ இராணுவத்தின் திரை மறைவுப் பெட்டிக்குள் நிர்வாணமாக செல்வதுடன் நாவலை முடித்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
     ஒரு சாராரின் பார்வையில் மட்டும் சுழலாது, கதையின் பலதரப்புக் கதைமாந்தர்களினூடாக, அவர்களின் பார்வையில் கருத்தியல் வாதங்களை, வாழ்வாதாராச் சிக்கல்களை முன்வைப்பதால் நாவலுக்கு ஒருவிதமான பன்முகத்தன்மை கிடைத்துவிடுகிறது. அது இன்னும் வீரியமாக நிகழ்கால அவலங்களை, பேரவலத்தில் சிக்கிப்பிணைத்த மக்களின் வாழ்வியலை வெளிப்படுத்துகிறது. மேலும் போரினால் இருதரப்பிற்கும் ஏற்படும் இழப்புகளையும், வலிகளையும் பதிவு செய்திருப்பதன் மூலம் இது ஒரு சமநிலைகொண்ட படைப்பாக அமைந்துள்ளது. இதுவே பாக்ஸ் ஒரு மகத்தான புதினமாக இருப்பதற்கான காரணமாக எனக்குத் தோன்றுகிறது. இப்புதினம் போரின் அழிவுகளை மட்டும் அல்லாமல் போர் எப்படி படிப்படியாக மானுட அறத்தை அழிக்கிறது என்பதையும் சுட்டியுள்ளது. சரி, தவறு என்று எதுவுமே இல்லாமல் ஆகிவிடும் உண்மையைச் சொல்கிறது. அனைத்தையும் தன்னுடைய வழியில் நியாயப்படுத்தும் நிதர்சனத்தைக் காட்டுகிறது. நாவல் முழுதும் வன்முறைகள் சூழ்ந்திருந்தாலும், கார்த்திகைத் தம்பி, சகோதரம் பக்ததாஸ், சந்த ஸ்வஸ்திக தேரர் பாத்திரங்களின் வழியாக மானுட அறத்தின் வலிமையையும் உணர்த்தியுள்ளது.

’ஒரு நல்ல துறவி எப்போதும் துறவியாக இருப்பதில்லை.” இந்த வரிகள் மனதிற்குள் விரிந்துகொண்டே போய் துறவிக்குப் பதிலாக தாய், தந்தை, புரட்சியாளன், எழுத்தாளன் என்று அனைவருக்குமான ஒரு வாசகமான விஸ்வரூபமெடுத்து நின்றது. இந்தப் புதினத்தின் வாசிப்பு அனுபவம் தந்த மன அதிர்வின் பாதிப்பில் இருந்து வெளிவரவே எனக்குச் சில காலம் எடுத்தது. வாசிக்காமல் பாதியில் விட்டதை நினைத்து வெட்கத்துடனும், கூடுதல் ஆர்வத்துடனும் இப்போது கொரில்லாவைத் துரத்திக் கொண்டிருக்கிறேன்.