Thursday, January 19

காட்சிப் பிழைஉங்க மகன் அன்புவின் வகுப்பாசிரியர் பேசறேன். தொந்தரவுக்கு மன்னிக்கவும். என் ஆழ்ந்த இரங்கல்கள். உங்க நிலைமை புரியுது. ஆனால் சொல்ல வேண்டியது என் கடமை. அன்பு கொஞ்சம் மன உளைச்சலில் இருப்பதுபோல் தெரிகிறது. இன்னும் நான்கு மாதங்களில் இறுதியாண்டுத் தேர்வு வருகிறது. நல்லா படிக்கிற பையன். நீங்கதான்...”

திரு. ஷான் ஆங்கிலத்தில் மிகவும் தாழ்ந்த குரலில் தயங்கித் தயங்கிப் பேசும் போதுதான்  புரிந்தது, நான் என் துக்கத்திலேயே உழன்று கொண்டிருந்ததில் அன்புவைக் கவனிக்கத் தவறியது.

உங்கள் அக்கறைக்கு ரொம்ப நன்றி! கண்டிப்பாகக் கவனிக்கிறேன்.”
அவருக்குச் சொன்னதையே எனக்குள்ளும் சொல்லிக் கொண்டு அலைபேசியை அணைத்தேன். முகப்பில் நானும் பாலாவும் அணைத்தபடி இருக்கும் புகைப்படம். இனி புகைப்படமாக மட்டுமே பார்க்கமுடியும் என்றாகி விட்டதே! அது எடுக்கப்பட்ட அன்று நிகழ்ந்த அத்தனையும்  அடுக்கடுக்காக மனத்தில் நீளத் தொடங்கும்போதே கண்ணீரும் வழியத் தொடங்கியது. இப்படித்தான் திரும்பிய பக்கமெல்லாம்பார்க்கும் பொருளெல்லாம் அவர் நினைவுகள் நிரம்பி வழிந்தன. அத்தனையிலும் அவருடைய சுவடுகள் அழுந்தப் பதிந்திருந்தன.

அந்தக் கொடூரமான இரவு கழிந்து  ஒரு மாதம் ஆகிவிட்டது. மறுநாள் முக்கியமான மீட்டிங்குக்கு தயார் செய்ய வேண்டும் என்று ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பிவிடச் சொல்லி விட்டுப் படுத்தார். கிட்டத்தட்ட ஒரு மாதமாக ஆஃபீசில் இருந்து லேட்டாக வருவதும், சீக்கிரம் எழுவதுமாக உடம்பு என்ன ஆகும் என்று கேட்டதற்கு,
நாளையோட எல்லாம் முடிஞ்சுடும். அப்புறம் ரெஸ்ட்தான். ஒரு வாரம் லீவு போட்டுட்டு  ரிலாக்ஸா எங்கேயாவது போயிட்டு வரலாம்
இதுதான் அவர் பேசிய கடைசி வார்த்தைகள். காலையில் எழுப்பியபோது அசைவே இல்லை. பயந்து போய் அப்பாவிற்கு போன் செய்தேன். அவர் வந்து பார்த்துவிட்டு ஆம்புலன்சுக்கு போன் செய்து காத்திருந்தபோதுஅன்புவின் அறையில் அலாரம் அடிக்கும் ஓசை. 5.30 மணிக்கு எழுந்து வீட்டிலிருந்து 6.30க்கு கிளம்பினால்தான் கிளமெண்டியில் இருக்கும் அவனது உயர்நிலைப் பள்ளிக்கு 7 மணிக்குள் செல்லமுடியும். அவன்  எழுந்து  வரவும், ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது.

அப்பாவுக்கு என்ன ஆச்சும்மா? ’

தெரியலடா, ஹாஸ்பிடல் போறோம், நீ…. ’

சொல்லி முடிப்பதற்குள் நானும் வருகிறேன் என்று கிளம்பி விட்டான். ஆம்புலன்ஸ் என். யு. ஹெச் நோக்கி விரைந்தது. அப்பா  ஓட்ட நானும் அன்புவும் காருக்குள் கலக்கத்துடன் உட்கார்ந்து இருந்தோம். அப்போதும், அதிக வேலையினால் உடம்புக்கு ஏதோ சரியில்லாமல் போய் விட்டது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் மருத்துவனையை அடைந்த அரைமணி நேரத்தில் சொல்லி விட்டார்கள்கார்டியாக் அரெஸ்ட்எல்லாம் முடிந்துவிட்டது என்று. முதலில் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நாளை  முதல் அலுவலகத்திலிருந்து ஒரு வாரம் ஓய்வு என்று சொல்லிவிட்டு மொத்தமாக உலகத்தில் இருந்தே ஓய்வெடுத்துக் கொண்டார் என்பது  புரிபட்டதும் வாழ்க்கையின்  நிதர்சனங்கள் அனைத்தும் அழிந்து விட்டாற்போல சுற்றம் மறந்து கதறத் தொடங்கினேன். அதற்குப் பிறகு, நடந்த எதுவுமே என் கட்டுப்பாட்டில் இல்லை நான் உட்பட.

உறவினர் வருகை, இரங்கல், ஆறுதல் என்றுஎன்னைத் தனியே விடுங்களேன்என்று கதறத் தோன்றுமளவு சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் என்னைக் கட்டியிழுத்தன. எத்தனையோ கேள்விகள்விசாரிப்புகள். எல்லாவற்றிற்கும் என் ஒரே பதில் மெளனம். அன்பு மட்டும் அழுது சிவந்த கண்களோடு பக்கத்திலேயே இருந்தான். காதல் திருமணம் என்பதால்  விலக்கிய உறவுக் கூட்டங்கள்கூட வந்திருந்தார்கள். அத்தனை பேரையும் எதிர்த்து எங்கள் கல்யாணத்தை நடத்திய என் அப்பாவேதான்இந்த முறையும் அத்தனை காரியங்களையும் தனியாளாகச் செய்தார்.

உன்னைத் தனியா விட்டுட்டு என்னால் போக முடியல, நான் இங்கேயே இருந்திடறேன்மா, உன் அண்ணன்கிட்ட நான் பேசிக்கறேன், உன் விருப்பத்த மட்டும் சொல்லு, அதுமாதிரியே செய்திடலாம்!”
அப்பா குரல் தழுதழுக்கச் சொன்னார். காதலித்தக் குற்றத்தை மருமகன் பிறந்ததும் கொஞ்சம் மறந்தாலும் அண்ணன் என்னை முழுமையாக மன்னித்து விடவில்லை. அவரைச் சொல்லியும் குற்றமில்லை. அம்மா இல்லாத என்மேல் அவருக்கு இருந்தது சகோதரப் பாசத்தையும் மீறிய அன்பு. என் காதலை அவர் நம்பிக்கைத் துரோகமாகவே பார்த்தார். அவருக்கென்று குடும்பமும் வந்துவிட்ட பிறகு, ஒன்றும் சொல்வதற்கில்லை. நல்லது கெட்டதுக்கு மட்டுமே தலை காட்டும் தூரத்துச் சொந்தமாகவே நடந்து கொள்வார். அப்பா அண்ணனோடு இருப்பதால் சில விஷயங்களில் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் முடிவதில்லை. இப்போது கொஞ்சம் இளகியிருக்கலாம். ஆனால் எதையும் யோசிக்கும் மனநிலையில் நான் இல்லை.

இப்போதைக்கு என்னை எதுவும் கேட்காதீங்கப்பா.  கொஞ்சநாள் போனதும் சொல்றேன்.” 
இதற்கு மேல் அவராலும் எதுவும் பேச முடியவில்லை. கண்களைத் துடைத்தவாறே கிளம்பிவிட்டார்.

எனக்குத் தனிமைதான் தேவைப்பட்டது. தனித்து விடப்பட்ட போதுதான் துக்கத்தை முழுமையாக உணர முடிந்தது. நடந்ததை உள்வாங்கிக் கொள்வதற்கான அவகாசமே தரப்படாமல் எல்லாம் முடிந்து விட்டதுபோல் இருந்தது. இனி என்ன என்று யோசிக்ககூட முடியவில்லை. அன்புவும் அமைதியாகவே இருந்தான். 2 வாரங்கள் கழித்துப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். நானும் அவனுக்கு வேண்டியதை எப்போதும் போல் செய்துவிடுவேன். மற்றபடி வேறு எந்த பேச்சுகளுக்கும் இடமில்லாமல் போனது. அப்பாவின் இழப்பு மட்டுமில்லாமல் என் மெளனமும் சேர்ந்து அவனைக் காயப்படுத்தியிருக்கும். இப்படி இருக்கக்கூடாது. அன்புவின் படிப்பை பாதிக்கிறது. மிகவும் முக்கியமானத் தேர்வு. நிலைத் தேர்வு. இதில் நல்ல புள்ளிகள் பெற்றால்தான் அவனுக்குப் பிடித்த தொடக்கக் கல்லூரியில் சேரமுடியும். ஆசிரியர் போன் செய்து சொல்கிறாரென்றால் இவன் என்ன மாதிரியான மனநிலையில் நடந்து கொண்டிருப்பான். எப்படிக் கவனிக்கத் தவறினேன். அந்த நேரத்திலும் தாய்மை என்னைக் குற்றவுணர்ச்சியில் தள்ளியது.

கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அன்புவாகத்தான் இருக்கும். படுக்கையில் இருந்து வேகமாக எழுந்து பாத்ரூமுக்குள் நுழைந்தேன். முகம் முழுதும் தண்ணீரால் அடித்துக் கழுவினேன். மனத்தின் சோக வடுக்களை அழிப்பதாக எண்ணிக் கொண்டு முகத்தை துண்டால் துடைத்தேன். ஹாலுக்கு வந்து பார்த்தபோது அன்பு உடைகளைக் கூட மாற்றாமல் சோபாவில் உட்கார்ந்திருந்தான். முகம் முழுதும் அத்தனை அயற்சி. அப்படியே அள்ளி அணைத்து தேற்றிவிடத் துடிக்கிறது மனம். அது அழுகையில் கொண்டு போய் முடியும் , மேலும் கலங்கிப் போவான் என்பதால் முடிந்தவரை கலகலப்பாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன்,

என்ன அன்பு, இன்னைக்கு சீக்கிரம் க்ளாஸ் முடிஞ்சதா? போன்கூட பண்ணல? ஏதும் சாப்பிடறியா? இல்ல மைலோ தரட்டுமா?”
உயர்த்தியப் புருவத்துடன் அவன் ஒரு மாதிரியாகப் பார்த்தான்.
மைலோ மட்டும் போதும்மா
சொல்லிவிட்டு எழுந்து அவனுடைய அறைக்குள் சென்றான்.
  
மைலோ கலந்து எடுத்து வந்தேன். அவன் இன்னும் வெளியே வரவில்லை. ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. கூர்ந்து கவனித்ததில் அவன் யாருடனோ அலைபேசியில் பேசுவது கேட்டது.

 எனக்கு எல்லாத்தையும் விட ரொம்பக் கவலை அம்மாவ நினைச்சுதான் சரத். அத்தனை பேரையும் எதிர்த்து லவ் மேரேஜ் பண்ணிகிட்டவங்கடா.  அம்மாவும் அப்பாவும் எப்படி இருப்பாங்க தெரியுமா. ஃப்ரெண்ட்ஸ் மாதிரி . அப்படி ஒரு நெருக்கம், எப்பவும் ஒரே கேலியும் கலாட்டாவுமா, இப்ப அம்மாவ பார்க்கவே கஷ்டமா இருக்கு. எப்படித்தான் இதிலிருந்து மீளப் போறாங்களோ

அவன் கேவத் தொடங்கியிருந்தான்.  அந்தப் பக்கம் அவன் நண்பன் சரத் என்ன சொன்னானோ தெரியவில்லை.
இல்லடா, எனக்கு அவங்களோட லவ் எப்படிப்பட்டதுன்னு தெரியும். அப்பா நிறைய சொல்லியிருக்காரு…”
அங்கிருந்து நகர்ந்தேன். எனக்கும் பாலாவிற்கும் இடையேயான காதல், அன்பு, பாசம், எல்லாவற்றையும்விட நட்புதான் அத்தனை இனிமையானதொரு வாழ்வைக் கொடுத்தது. அதைக்கூட அன்பு கவனித்திருக்கிறானே. நான்தான் இன்னும் அவனை சிறுபிள்ளையாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பற்றி எவ்வளவு யோசிக்கிறான்.  பாவம். நான் அவனுடைய துக்கத்தை மதிப்பிடத் தவறிவிட்டேன்.

மைலோவை டைனிங் டேபிளில் வைத்துவிட்டு வாசல் கதவைத் திறந்து வெளியே வந்தேன். சிலுசிலுவென்ற காற்று கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது. 16 வயது. அப்பாவின் அரவணைப்பும் வழிகாட்டுதலும் அதிகம் தேவைப்படும் வயது. எப்படிப்பட்ட இழப்பு அவனுக்கு. எப்போதும் அப்பா அப்பா என்று அவர் பின்னாடியே சுற்றுவான். ஆண்பிள்ளைகள் அம்மாவிடம்தான் ரொம்ப நெருக்கமாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் அன்புவுக்கு எப்பவும் அப்பாதான். என்னுடன்தான் அதிக நேரம் இருப்பதுபோல் இருக்கும். . ஆனால் என்னிடம் சொல்லாததைகூட, கிடைக்கும் நேரத்திற்குள் அப்பாவிடம் சொல்லி விடுவான். எல்லாமே அப்பாதான் அவனுக்கு. அவருக்கு, சொல்லவே வேண்டாம். ஒரே பிள்ளை என்பதால் அத்தனை பிள்ளைப்பாசத்தையும் இறக்கி வைக்கும் ஒரே இடம் அவன்தான்.

சிந்தனையைக் கலைத்தது அன்புவின் குரல்.
அம்மா இங்க இருக்கியா?”
என்றபடியே அவனும் வாசலுக்கு வந்தான்.
படிப்பெல்லாம் எப்படிப் போகுது அன்பு?”
ஒகேதான்மா”
அடுத்து என்ன பேசுவதென்றே புரியாமல் நின்றோம்.
வீக் எண்ட் எங்கேயாவது வெளிய போகலாமா?”
ஒவ்வொரு வாரமும் இந்தக் கேள்விக்கு  நாங்கள் மூன்று பேருமாக ஆளுக்கு ஒரு இடம் சொல்லி ஒரு முடிவுக்கு வருவதற்குள் அத்தனை அமர்க்களப்படும்ஒரே மாதத்தில் எப்படி ஒரு மாற்றம்எப்போதும்போல அவர் நினைவுகள் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்ககவனமாக முகத்தில் அதைக் காட்டாமல் மறைக்கிறேன்.
ஷாப்பிங்? இல்லேனா மூவி?”
கேள்விக்குப் பதில்  எதுவும் சொல்லவில்லை அவன்நானே முடிவு செய்தேன்விவோ சிட்டி மாலுக்குப் போனோம். ஏதேதோ பேசி கலகலப்பாக்க முயன்றேன்அவனுக்குப் பிடித்தப் படத்திற்குப் போனோம்.  ’பீட்ஸா ஹட்டில் சாப்பிட்டோம்அப்படியே என் அண்ணன் வீட்டிற்கும் போனோம். எல்லாம் அவனுக்குள் ஒரு நல்ல மாற்றத்தை உண்டு பண்ணும் என்றே தோன்றியது எனக்கு.

ஒரு மாத விடுப்பு முடிந்து  நானும் வேலையில் சேர்ந்துவிட்டேன்கரிசனப் பேச்சுகளும்இரக்கப் பார்வைகளும் இப்போது எனக்குப் பழகிப் போயிற்று. ஆனால் அவருடைய நினைவுகள் மட்டுமே நிறைந்து இருக்கும்  என் மனம்  என்னைத் தனிமையை நோக்கியே தள்ளியதுஎன் படுக்கையறையில் மட்டுமே நானும் என் துக்கமுமாக தனித்திருக்க முடிந்ததுஅது  மட்டுமே என்னைத் தேற்றுவதாக இருந்தது. எல்லாரிடமும் பேசத்தான் செய்கிறேன்ஆனால் எப்போது இரவு வரும், என் அறைக்குள் சென்று அவருடைய நினைவுகளில் மூழ்கிக் கிடக்கலாம் என்ற  ஒரே தவிப்புத்தான் மனதிற்குள் ஓடிக் கொண்டே இருக்கும். என்னவோ அந்த நேரங்களில் மட்டுமே நான் நானாக இருக்கிறேன். என்னால் முடிந்தவரை அன்புவிடம் பழைய மாதிரி இருக்க முயற்சி செய்தேன்அவனும் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு வந்து கொண்டிருக்கிறான்படிப்பிலும் கவனம் செலுத்தினான்.

அன்று சனிக்கிழமை. மதியம் 2 மணி. அன்புவின் நண்பர்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள். சேர்ந்து ஏதோ ப்ராஜக்ட் செய்ய வேண்டுமாம். எல்லாரும் கணினியும் கையுமாக  இருந்தார்கள். புத்தகங்களும், காகிதங்களுமாக இடையிடையே நான் கொண்டு போய்க் கொடுத்த நொறுக்குத் தீனிகளும் சேர்ந்து   அறை முழுதும்   இறைந்து கிடந்தன. பல நாட்களாய் வெறுமை சூழ்ந்த வீட்டை அவர்களின் பேச்சு சத்தமும் சிரிப்பொலிகளும் நிறைத்தன. நண்பர்களோடு சேர்ந்து சிரிக்கும் அன்புவின் முகம் பார்த்து ரசிப்பதற்காகவே நானும் அவ்வப்போது அவர்களுடன் உட்கார்ந்து பேசினேன். கொஞ்சம் கொஞ்சம் படிப்பும் நிறைய அரட்டையுமாக பொழுது கழிந்தது. ப்ராஜெக்ட் முடித்ததும் ஒவ்வொருவராக கிளம்பத் தொடங்கினர். சரத் மட்டும்தான் இருந்தான். அவன் வீடு பக்கத்தில்தான் இருக்கிறது. அதனால் அப்புறம் கிளாம்பினால் போதும் என்று எண்ணியிருப்பான். சரத்தும் அன்புவும் கணினியில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தார்கள். இரவு உணவு தயாரிக்க அடுக்களை சென்றேன். கை தன் பாட்டில் வேலை செய்ய, மனம் பின்னோக்கிச் சென்று அவர் நினைவுகளைத் தோண்டித் துருவி என் கண்முன்னே நிறுத்த ஆரம்பித்தது. அதில் மூழ்கியபடியே வேலையை முடித்துவிட்டு வெளியே வரும்போது மணி ஏழாகிவிட்டது. இன்னுமா விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் இருந்த அறை நோக்கிச் சென்றேன்.  

இவ்வளவு நேரம் திறந்தே இருந்த அறைக் கதவு இப்போது லேசாகச் சாத்தியிருந்தது.
என்னடா இப்படிச் சொல்ற?”
சரத்தின் அதிர்ச்சிக் குரல் என்னை அங்கேயே நிறுத்தியது. அன்பு பேச ஆரம்பித்தான்.
ஆமாம்டா, அம்மா இப்போ முன்னாடி மாதிரியே நார்மலா இருக்காங்க, கொஞ்ச நாளா இருந்த சோகமும் அமைதியும்கூட போயிருச்சு. கலகலப்பாதான்  இருக்காங்க.”
அப்புறம் என்னடா? இதைத்தான நீ எதிர்பார்த்த? இன்னும் என்ன வேணும் உனக்கு?”
இன்னும் ஏதோ குறை இருக்கிறதோ அவனுக்கு. ஒருவேளை என்னுடைய உள்மன சோகங்கள், அவரின் இழப்பில் இருந்து வாழ்க்கையே அஸ்தமித்தது போன்ற என் எண்ணங்கள், அதை அவனிடம் இருந்து மறைக்க நான் படும் தவிப்புகள் எல்லாம் அவனுக்குப் புரிந்துவிட்டதோ. என்னையும் மீறி என் உண்மை மனநிலை வெளிப்பட்டுவிட்டதோ. சரத்தின் கேள்விக்கான பதில் எனக்கும் தெரிந்தே ஆகவேண்டும். .
அன்பு சிறிது நேரம் அமைதியாக இருந்தான்.
சொல்லுடா...”
சரத் மறுபடியும் கேட்கவும் தயங்கியபடியே சொன்னான்.

அம்மா இப்போ நல்லாதான் இருக்காங்க. அவங்களோட சோகத்தில் இருந்து முழுசா வெளில வந்துட்டாங்கனுதான் நினைக்கிறேன். ஆனால் எனக்குத்தான்...
திரும்பவும் அமைதி.
இப்போ என்னதான் பிரச்சனை உனக்கு?”
சரத் பொறுமையிழந்தவனாய் கேட்டான். ஆனால் நான் பொறுமையாகவே காத்திருந்தேன்.
அம்மா அப்பா மேல வச்சிருந்த காதல், பாசமெல்லாம் இவ்வளவுதானானு இருக்குடா? இவ்ளோ சீக்கிரத்தில்  நார்மல் ஆகிட்டாங்க…”

இதற்கு மேல் அவன் பேசியது எதுவும் என் காதில் விழவில்லை. அத்தனை அவயங்களும் தன் செயல்பாட்டை நிறுத்தி விட்டதுபோல உணார்ந்தேன். கண்ணீர்ச் சுரப்பிகள் மட்டும் கடமை தவறாமல் என் கன்னங்களை நனைத்தன